சென்னை : சென்னை, பூந்தமல்லியில் 16 ஏக்கர் நிலத்தில், 232 வீடுகள் உடைய குடியிருப்பு திட்டத்தை, 'மஞ்சு பவுண்டேஷன்ஸ்' நிறுவனம், 2014ல் அறிவித்தது.அதில் வீடு வாங்க, ரேணுகா என்பவர் முடிவு செய்து, பல்வேறு தவணைகளாக, 22.84 லட்சம் ரூபாய் செலுத்தினார்.இதற்கான ஒப்பந்தப்படி, 2016 செப்டம்பரில், வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், 2016 நிலவரப்படி, அடித்தள பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டு இருந்தது.இதனால், குறிப்பிட்ட காலத்தில் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்காததால், இழப்பீடு கோரி, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் ரேணுகா வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு தொடர்பாக, ஆணையத்தின் விசாரணை அதிகாரி உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், கட்டுமான நிறுவனம் உரிய காலத்தில் பணிகளை முடிக்காதது உறுதியாகிறது. எனவே, மனுதாரர் இந்த வழக்கில் இழப்பீடு பெற தகுதியுடைவர் ஆகிறார்.எனவே, வீட்டை முறையாக ஒப்படைக்காத நிறுவனம், பணிகளை முடிக்காமல், மனஉளைச்சல் ஏற்படுத்தியதால், மனுதாரருக்கு 1.50 லட்ச ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். மேலும் வழக்கு செலவுக்காக, 50,000 ரூபாய் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.