செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'டிட்வா' புயல் காரணமாக பெய்த கனமழையால், 200 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில், 589 ஏரிகள் என, மொத்தம் 1,117 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித் துறையில், 2,512 குளங்கள் உள்ளன. மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை மற்றும் 'டிட்வா' புயல் காரணமாக மழை பெய்ததில், 200 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன. 334 குளங்கள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளன. குறிப்பாக, திருப்போரூர் ஒன்றியத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 63 ஏரிகளில் மானாமதி, தையூர், சிறுதாவூர், செம்பாக்கம் ஏரி உள்ளிட்ட 35 ஏரிகள், முழுமையாக நிரம்பி உள்ளன. அருவியான தையூர் ஏரி தையூர் ஏரி 400 ஏக்கர் பரப்பில் உள்ளது. இந்த ஏரி நீர் மூலமாக, 1,000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக, தையூர் ஏரி முழுதும் நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் அருவி போல் வெளியேறுகிறது. இதையறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பைக், ஆட்டோ, கார் ஆகியவற்றில் வந்து, உபரி நீரில் குளித்து மகிழ்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி வருவதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நீர் நிலை பகுதிகளில், சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.