மதுராந்தகம் ஏரியில் 3 ஆண்டுக்கு பின் 40 சதவீதம்... நீர் தேக்கம்! : எஞ்சிய பணியை முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
மதுராந்தகம்:மதுராந்தகம் ஏரியை சீரமைக்கும் பணி, மொத்தமாக 82 சதவீதம் முடிந்துள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின், ஏரியில் 40 சதவீதம் அளவிற்கு தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.மதுராந்தகத்தில் உள்ள ஏரி, பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி, 2,500 ஏக்கர். இதில் உள்ள ஐந்து மதகுகள் வழியாக, 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு, 3,000 ஏக்கர் நிலங்கள் என, மொத்தம் 7,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மதுராந்தகம் ஏரியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடந்த 2022 முதல் ஏரியில் துார் வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரி கலங்கல்களில், கதவணையுடன் கூடிய உபரிநீர் போக்கி கட்டமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், ஏரியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்காக, தற்போது கூடுதலாக, 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.மொத்தமாக, 160 கோடி ரூபாய் செலவில், மதுராந்தகம் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் உத்திரமேரூர் ஏரிகள் நிரம்பி, கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், கிளியாறு மற்றும் நெல்வாய் ஆறு ஆகியவற்றிலிருந்து வரும் நீர், மதுராந்தகம் ஏரிக்கு மிக முக்கிய நீராதாரம்.கடந்த மூன்று ஆண்டுகளாக, மதுராந்தகம் ஏரியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், ஏரிக்கு வரும் நீர் முழுதும் வெளியேற்றப்பட்டது.தற்போது இந்த ஏரியில் கலங்கல்கள் அமைக்கும் பணி நடந்து வருவதால், மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஏரியில், விவசாய பயன்பாட்டிற்காக, 40 சதவீதம் தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளது.விவசாய பயன்பாடு மற்றும் மதுராந்தகம் ஏரியைச் சுற்றிலுள்ள பகுதிகளில் கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறையாத வகையில், தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் கோரிக்கைமதுராந்தகம் ஏரியில், கடந்த 2022 ஜூன் 6ம் தேதி துவக்கப்பட்ட சீரமைப்பு பணியை, 24 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது.ஆனால், 30 மாதங்களைக் கடந்தும், இன்னும் பணிகள் நடந்து வருகின்றன.சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, மதுராந்தகம் ஏரியை விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மதுராந்தகம் பகுதி விவசாயிகள்.4 மாதத்தில் பணி முடியும்மதுராந்தகம் ஏரியில் ஐந்து மதகுகள் முழுதும் சீரமைக்கப்பட்டு உள்ளன. விவசாய பயன்பாட்டிற்கு 40 சதவீதம் நீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.325 மில்லியன் கன அடி நீர் தற்போது தேக்கி வைக்கப்பட்டு, 2,852 ஏக்கர் விளைநிலங்களுக்கு, தண்ணீர் செல்கிறது.தானியங்கி 'ஷட்டர்'கள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.இன்னும் நான்கு மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவுற்று, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.-நீள்முடியோன்,உதவி செயற்பொறியாளர், கிளியாறு வடிநில உபக்கோட்டம், மதுராந்தகம்.
இதுவரை நடந்துள்ள பணி விபரம்:
1. மதுராந்தகம் ஏரியை துார்வாரி 18,500 மீட்டர் புதிதாக முகப்பு கரை அமைத்தல், கரை அருகிலுள்ள தாழ்வான பாசன நிலங்களை உயர்த்தி மட்டப்படுத்தும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது.2. 3 கி.மீ., நீளமுள்ள ஏரிக்கரையை அகலப்படுத்தும் பணி 30 சதவீதம் முடிந்துள்ளது.3. 1, 2, 3, 4 மற்றும் 5 ஆகிய கலங்கல்களை மறுவடிவமைக்கும் பணி 100 சதவீதம் முடிந்துள்ளது.4. ஏரியின் 12 தானியங்கி 'ஷட்டர்'கள் பொருத்தப்பட்ட நீர் போக்கி சீரமைப்பு பணி 85 சதவீதம் முடிந்துள்ளது.5. ஏரியின் பழுதடைந்த பாசன மதகு 1, 2, 3, 4 மற்றும் 5ஐ சீரமைக்கும் பணி 95 சதவீதம் முடிந்துள்ளது.6. ஏரியின் முக்கிய நீர் வரத்து கால்வாயான நெல்வாய் மடுவு மற்றும் கிளியாற்றை துார்வாரி பலப்படுத்துதல் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது.7. மதுராந்தகம் ஏரிக்கரையின் முன்பக்கம் அமைந்துள்ள 1,567 மீட்டர் நீளமுள்ள பழுதான தடுப்புச் சுவரை புதிதாக வடிவமைத்து, கட்டுதல் பணி 95 சதவீதம் முடிந்துள்ளது.8. மதுராந்தகம் ஏரியில் இதுவரை மொத்தமாக, 82 சதவீத பணி முடிந்துள்ளது.