செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில், இறந்தவர்கள் உள்ளிட்ட 5.81 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக, அரசியல் கட்சியினர் சரிபார்க்க, ஓட்டுப்பதிவு அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி கடந்த நவ., 4ம் தேதி துவங்கி, வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், 27 லட்சத்து 87 ஆயிரத்து 362 வாக்காளர்களுக்கு, 2,826 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், கணக்கீட்டு படிவங்களின் பிரதிகளை வழங்கினர். கடந்த சில நாட்களாக, கணக்கீட்டு படிவங்கள் திரும்பப்பெறும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் இறந்தவர்கள், இரட்டை வாக்காளர்கள், வசிப்பிடத்தில் இல்லாதவர்கள் என, 5.81 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்த, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு சப் - கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில் செங்கல்பட்டு, மறைமலை நகர் ஆகிய பகுதிகளில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், நீக்கப்பட்ட வாக்காளர்கள் விபரங்களை சரிபார்த்து தரவும், கணக்கீட்டு படிவங்களை விரைவாக வழங்கவும், அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.