உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள்; காஞ்சிபுரத்தில் ஓராண்டில் 69 பேர் கைது

குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள்; காஞ்சிபுரத்தில் ஓராண்டில் 69 பேர் கைது

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக, ஓராண்டில் 69 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற சம்பவங்களில் சிறார்கள் அதிகளவில் ஈடுபடுவது, குழந்தைகள் நல அதிகாரிகள், போலீசார், பெற்றோருக்கு கவலை மற்றும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதி பிரிந்து தனி மாவட்டம் ஆனதால், காஞ்சிபுரம் மாவட்டம் சிறிய எல்லை கொண்ட மாவட்டமாக உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், தற்போது இரண்டு மகளிர் காவல் நிலையம் உட்பட 15 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

புலன் விசாரணை

கொலை, திருட்டு, பாலியல் பலாத்காரம் போன்ற பல்வேறு வகையான குற்ற சம்பவங்கள் நடந்தபடியே இருக்கிறது. இருப்பினும், விரைவாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். அதேபோல், கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனை செய்வோர் மீதும் போலீசார் தொடர் நடவடிக்கை எடுக்கின்றனர்.ஆனால், இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களில் பலரும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என்பதால், போலீசார் ஆச்சரியப்படுகின்றனர். அதேசமயம், குழந்தைகள் நல அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குற்ற சம்பவங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொறு ஆண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சிறுவர்கள் ஈடுபட்ட குற்ற சம்பவங்களை பார்க்கும் போது, சிறுவர்களின் மனநிலை, அவர்களின் நட்பு வட்டாரம், போதை பொருள் பயன்பாடு போன்றவை, சிறார்களை மோசமான நிலைக்கு கொண்டு செல்வது தெரிய வந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 69 சிறார்கள், பல்வேறு வகையான குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட காரணத்தால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் சிறுவர்களை கையாள்வதற்கான சட்ட, விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதால், போலீசாருக்கு சிறார்கள் செய்யும் குற்ற சம்பவங்களால் தலைவலி ஏற்படுத்துகிறது.போதை பொருள் பயன்படுத்தும் சிறார்கள் நாளடைவில் போதை பொருள் விற்பனை செய்கின்றனர். இதையடுத்து, சிறிய திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அடுத்தகட்டமாக, வழிப்பறி, கொலை முயற்சி, கொலை போன்ற சம்பவங்களிலும் சிறார்கள் ஈடுபடுகிறார்கள்.இன்றைய சமுதாய சூழலில், சிறார்களின் குற்ற சம்பவங்களால் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும், பெற்றோருக்கும் கவலையை ஏற்படுத்துகிறது.இதுகுறித்து காஞ்சி போலீசார் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறார்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. போலீசார் விசாரணையில் சிறார்களின் நட்பு வட்டாரம் மிக மோசமாக இருந்துள்ளது.

கண்காணிப்பு

பள்ளியிலேயே இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் ஓரளவு தீர்வு கிடைக்கும். சிறு வயதிலேயே குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள் மீது போலீசார் தொடர் கண்காணிப்பில் இருப்பர். ஒரு முறை குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சிறார்கள் பலருக்கு, குற்றவாளிகளின் தொடர்பு பெரிய அளவில் கிடைக்கிறது. சிறார் என்பதால், தண்டனை கிடையாது என நினைக்கின்றனர். ஆனால், குற்றம் நிருபிக்கப்பட்டால், கட்டாயம் தண்டனை வழங்கப்படும்.சிறு வயதிலேயே நீதிக்கதைகளும், ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இளைஞர் நீதி குழுமத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:குற்றத்தில் ஈடுபட்ட சிறார்களுக்கு மன ஆலோசனை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறார் பள்ளி மற்றும் கல்லுாரியில் படிப்பதாக இருந்தால், மீண்டும் அதே பள்ளி, கல்லுாரியில் சேர்க்க வழிவகை செய்கிறோம். பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோருக்கு குழந்தை நலம் சார்ந்த ஆலோசனையும், குடும்பத்தில் உள்ள சிக்கல் தவிர்ப்பது பற்றி நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம். போதைக்கு அடிமையான சிறார் எனில், அந்த சிறாரை செங்கல்பட்டில் இயங்கி வரும் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்து, சிறாரின் உடல் நிலை பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனநிலை ஆலோசனை யோகா பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், குற்றத்தில் ஈடுபட்ட சிறார்களை மாவட்ட நன்னடத்தை அதிகாரி வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் சிறார்கள் குற்றத்தில் ஈடுபடாத வண்ணம், போதையின் தீமை குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

வழிப்பறியில் அதிக ஈடுபாடு

திருவண்ணாமலை மாவட்டம், வீரலுார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 30. ஸ்ரீபெரும்புதுாரில் தங்கி, கட்டுமான தொழில் செய்து வருகிறார். இம்மாதம் 2 ம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு, திருவண்ணாமலை செல்வதற்காக, ஸ்ரீபெரும்புதுார் மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் இருந்து, சர்வீஸ் சாலை வழியாக, ராஜிவ்காந்தி நினைவகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றார். ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், முருகனை மடக்கி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து அவரிடமிருந்து 3.5 சவரன் தங்க செயின், 20 ஆயிரம் ரூபாய் பணம், சாம்சங் மொபைல் உள்ளிட்டவைகளை பறித்து அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து, முருகன் அளித்த புகாரின்படி, சென்னையை சேர்ந்த அஜய், 23, என்பவரையும் 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், கடந்த ஜனவரி மாதம் மாட்டுப்பொங்கல் அன்று காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் சாலையில், டூ- வீலரில் சென்ற பாஸ்ட்புட் மாஸ்டரை மடக்கிய மூன்று பேர், அவரிடம் இருந்து அதிக விலை மதிப்புள்ள மொபைல் போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக, 16 வயது மற்றும் 14 வயது சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை