| ADDED : ஜன 13, 2024 12:54 AM
திருப்போரூர்:திருப்போரூரில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கான மயானம், திருப்போரூர் மீன் மார்க்கெட் அருகே, ஏரிக்கரையோரத்தில் உள்ளது.இந்த சுடுகாட்டிற்கு, பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. சுடுகாட்டிற்கும் மீன் மார்க்கெட் அருகே உள்ள சாலைக்கும், 200 மீட்டர் இடையே கந்தசுவாமி கோவில் நிலம் உள்ளது. இதில், குத்தகை அடிப்படையில் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பணியாற்றி வந்த ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது இறுதி சடங்கு, இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது.உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால், அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த நெல் வயல் வழியாக துாக்கி சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.இறந்தவர் உடலை துாக்கி கொண்டு, 50க்கும் மேற்பட்டோர் வளர்ந்த நெற்பயிரிலும், சேறு சகதியிலும் நடந்து சென்று சிரமப்பட்டனர்.இந்த சுடுகாட்டுக்கு செல்வதற்கு, உரிய பாதை வசதி ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.