சென்னை:அண்ணா நகர் டவர் கிளப் சார்பில், அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் மற்றும் கிளப்களுக்கு இடையிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் போட்டிகள், அண்ணா டவர் பூங்காவில் நேற்று துவங்கின.கிளப் போட்டியில், டவர் கிளப், எம்.சி.சி., - ஏ.பி.சி., - பிரசிடென்சி உட்பட 12 கிளப்கள் பங்கேற்றுள்ளன.இதில், 6, 10, 15 ரெட் ஸ்னுாக்கர்ஸ் மற்றும் இரட்டையர் பிரிவினருக்கான தனிப்பேட்டி, 60 நிமிடம் விளையாடும் பில்லியர்ட்ஸ் என, ஆறு விதமான போட்டிகள் நடக்கின்றன.முதல் நாளான நேற்று நடந்த,கிளப்களுக்கு இடையிலான போட்டியை, டவர் கிளப் தலைவரும், வடசென்னை தி.மு.க., - எம்.பி.,யுமான கலாநிதி பங்கேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் பேசியதாவது:வரும் 17ம் தேதி வரை, 'டவர் கிளப்' சார்பில், 12 கிளப்கள் பங்கேற்கும் போட்டிகள் நடக்கின்றன. தொடர்ந்து, அகில இந்திய ஸ்னுாக்கர் போட்டி, 18ல் துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது. இதில், 'அர்ஜூனா' விருது பெற்ற சவூராவ் கோதாரி உட்பட நாட்டின் முன்னணி வீரர்கள் உட்பட 120 பேர் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் வெல்வோருக்கு மொத்தம் 6.4 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.