| ADDED : பிப் 18, 2024 05:20 AM
அனகாபுத்துார்: அனகாபுத்துாரில், இயற்கை நார் நெசவு குழுமம் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தினர், வாழை, கற்றாழை, அண்ணாச்சி, மூங்கில் உள்ளிட்ட இயற்கை நார்களை கொண்டு, புடவை, பேக், பேன்ட், சட்டை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.இங்கு தயார் செய்யப்படும் பொருட்கள், உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.இங்கு தயார் செய்யப்படும் புடவைகளை வெளிநாட்டினர் பார்த்து, 'ஆன்லைன்' வயிலாக வாங்கி பயன்படுத்துகின்றனர். இங்கிருந்து, ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, பிரத்யேகமாக வாழை நாரில் புடவை தயார் செய்து அனுப்பப்பட்டது.இந்நிலையில், வரும் 26 முதல் 29ம் தேதி வரை, டில்லியில் சர்வதேச கைத்தறி கண்காட்சி நடக்கிறது. இதில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான துணி உற்பத்தி என்ற தலைப்பில், அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமத்தினர் பங்கேற்கின்றனர்.இந்த கண்காட்சியில், 18 வகையான இயற்கை நார் உற்பத்தி பொருட்களை, இக்குழுமத்தினர் காட்சிப்படுத்த உள்ளனர்.