செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம், குப்பை, கழிவுநீர் சூழ்ந்து துர்நாற்றத்துடன் மோசமான நிலையில் உள்ளது. வளாகத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததால், பயணியர் தவித்து வருகின்றனர்.செங்கல்பட்டு நகரத்தின் மையப்பகுதியில், புதிய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதி, தாம்பரம், கல்பாக்கம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் குப்பை
செங்கல்பட்டு நகரில் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் கலை கல்லுாரி, அரசு சட்டக்கல்லுாரி, முதன்மை மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், 25க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.மேற்கண்ட அலுவலகங்களுக்கு வருவோர், பள்ளி, கல்லுாரி மாணவ -- மணவியர் இந்த பேருந்து நிலையத்தை தினசரி பயன்படுத்துகின்றனர்.செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பலர், மகேந்திரா சிட்டி, மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், செங்கல்பட்டு பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து மாற்று பேருந்துகளில் செல்கின்றனர்.இந்த பேருந்து நிலையத்தை, செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பேருந்து நிலையம் முழுதும் பிளாஸ்டிக் குப்பை நிறைந்தும், துாசி படிந்தும் காணப்படுகிறது.கழிவுநீர் கால்வாய் மூடிகள் பெயர்ந்து, சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ஈக்கள், கொசுக்கள் பேருந்து நிலையம் முழுதும் பரவியுள்ளன. இதனால், பயணியருக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது.போதிய அளவில் இருக்கைகள் இல்லாததால், பயணியர், முதியவர்கள், நோயாளிகள் நீண்ட நேரம் நின்றபடி பேருந்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. பாக்கு எச்சில்
பேருந்து நிலைய கட்டடத்தில், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுாட்ட வசதியாக தனி அறை அமைக்கப்பட்டது.இந்த அறை, பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக, பேருந்து நிலையம் வரும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலுாட்ட மிகவும் சிரமப்படுகின்றனர்.பேருந்து நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள கழிப்பறை செல்லும் வழிகளில் உள்ள சுவர் முழுதும், பாக்கு எச்சில்களால் குளித்துள்ளன.இரவு நேரங்களில், பலர் மது அருந்தும் கூடமாக மாறியுள்ளது. அவர்கள் விட்டுச் சென்ற காலி பாட்டில்கள், தினசரி கழிப்பறை வளாகங்களில் சிதறி கிடக்கின்றன. பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பழக்கடை, உணவகங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து சேகரமாகும் குப்பை, வளாகத்தில் கண்ட இடங்களில் கொட்டப்படுகின்றன.குப்பை தொட்டிகள் முறையாக இல்லை என, கடைக்காரர்கள் நகராட்சி மீது குற்றம் சாட்டுகின்றனர். பேருந்து திரும்பும் பகுதியில் கொட்டப்படும் குப்பை, பேருந்து சக்கரங்களில் சிக்கி, பேருந்து நிலையம் முழுதும்சுற்றுலா செல்கின்றன. கோரிக்கை
அதனால், துர்நாற்றம் பேருந்து நிலைய வளாகம் முழுதும் வியாபித்து, பயணியரை மூக்கை மூட கட்டாயப்படுத்துகின்றன.குறிப்பாக, குடிநீர் வசதி இல்லாததால், பயணியர் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதே போல, போதிய பாதுகாப்பு இல்லாததால், அடிக்கடி திருட்டு சம்பவங்களும் நடக்கின்றன.எனவே, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தை சீரமைக்கவும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறையில் சிறுநீர் கழிக்க, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஆண் பயணியர் பொது வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். மேலும், பயணியர் வருகைக்கு ஏற்ப, போதுமான கழிப்பறைகள் இல்லாததால், பயணியர் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு கூடுதலாக இலவச கழிப்பறைகள் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சந்தோஷ்,உத்திரமேரூர்.
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பயணியர் வசதிக்காக, பேருந்து நிலைய வளாகத்தில், செங்கல்பட்டு நகராட்சி 'நமக்கு நாமே' திட்டம் மற்றும் செங்கல்பட்டு வணிகர் சங்க பங்களிப்பு நிதியுடன் சேர்த்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது.சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்த சுத்திகரிப்பு நிலையம், பழுதடைந்தது. அதன்பின், அந்த பழுது சீரமைக்கப்படவில்லை. ஓராண்டாக காட்சிப் பொருளாகவே உள்ளது.இதன் காரணமாக, கோடை வெயிலில் குடிநீர் இல்லாமல், பயணியர் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
கையுறைகள் இல்லாமல்துாய்மை பணியாளர்கள்
செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தை சேர்ந்த நகராட்சி துாய்மைப் பணியாளர்கள், பேருந்து நிலையத்தில் குப்பை அள்ளும் போது, முறையாக கையுறை, முகக்கவசம் அணிவதில்லை.மேலும், தங்களின் பாதுகாப்புக்காக, குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக் கவர்களையே கையுறைகளாக பயன்படுத்தி, கழிவுநீர் கால்வாயில் உள்ள குப்பை கழிவுகளை அள்ளுகின்றனர்.இவர்களுக்கு, முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மேலும், பேருந்து நிலையத்தில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.