உபரிநீர் கால்வாயில் தடுப்பணைகள் போந்துார் விவசாயிகள் காத்திருப்பு
சித்தாமூர், சித்தாமூர் அருகே போந்துார் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயமே கிராமத்தின் பிரதான தொழில்.இங்கு, 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த ஏரி வாயிலாக, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெற்று வருகிறது.போந்துார் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் வழியாக வயல்வெளி மற்றும் வாயலுார் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இப்பகுதியில் கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால், விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 3 கி.மீ., நீளமுள்ள ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணைகள் அமைத்து, மழைக்காலத்தில் தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.