மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
மதுராந்தகம்:கோவை கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்வை கண்டித்து, மதுராந்தகம் தேரடி வீதியில் நேற்று, பா.ஜ.,வினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். மகளிர் அணி மாநில துணைத்தலைவி சங்கீதா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 'தி.மு.க., ஆட்சியில் மதுபோதை, கஞ்சா ஆகியவை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டோர் சுதந்திரமாக உள்ளனர். 'அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளியை பிடிக்க காலம் தாழ்த்திய அரசு, கோவை கல்லுாரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை சுட்டு பிடித்ததாக பெருமையுடன் சொல்வது வெட்கக்கேடான விஷயம். முதல்வர் பதவி விலக வேண்டும்' என, கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக்கழக பா.ஜ.,வினர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.