| ADDED : டிச 21, 2025 05:34 AM
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் குறுக்கே வந்ததால், அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சேலத்தில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு நேற்று மதியம் 2: 00 மணியளவில் 20 க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக் கொண்டு, அரசு பேருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. மாலை 5:30 மணியளவில், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுப்பாக்கம் வந்தபோது, திடீரென சாலையின் மையப்பகுதியில் இருந்து மாடுகள் கூட்டமாக கடந்ததால், மாடுகள் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வலது புறமாக திருப்பி உள்ளார். இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலையின் மையப்பகுதியில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பயணியர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். நடத்துனருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அச்சிறுபாக்கம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.