| ADDED : ஜன 28, 2024 04:08 AM
சூணாம்பேடு: சூணாம்பேடு பஜார் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய பேருந்து நிழற்குடை இருந்தது. இந்த நிழற்குடை சேதமடைந்ததால், அதை அகற்றிவிட்டு, புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.கடந்த ஆண்டு, பிப்., 21ம் தேதி 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை மற்றும் பாலுாட்டும் அறையுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.இந்த பேருந்து நிலையத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதையடுத்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் நிழற்குடையில் போதிய இடவசதி இருக்காது என்பதால், பேருந்து நிலைய கட்டுமான பணி துவக்கப்படாமல் இருந்தது.இதையடுத்து, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்து, 'டெண்டர்' விடப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் கட்டுமான பணி துவக்கப்பட்டது.தற்போது வரை அடித்தளம் கூட அமைக்கப்படாமல், ஆமை வேகத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், பேருந்திற்காக காத்திருப்போர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ள கட்டுமான பொருட்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டுமான பணியை துரிதப்படுத்தி, கோடை காலத்திற்கு முன் முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.