சதுரங்கப்பட்டினம் வாகன நிறுத்துமிட ஏலம் அரசியல் தலையீடால் மீண்டும் ஒத்திவைப்பு
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகம் நுழைவாயில் அருகில், சதுரங்கப்பட்டினம் ஊராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. கல்பாக்கம் ஒப்பந்த நிறுவனங்களில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள், தங்களின் இருசக்கர வாகனங்களை, ஊராட்சி இடத்தில் நிறுத்தி, அணுசக்தி வளாக பணிக்கு செல்கின்றனர். கார், கனரக வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுகின்றன.ஊராட்சி நிர்வாக வருவாய் கருதி, ஊராட்சி நிர்வாகம், கடந்த 2022ல் அங்கு கட்டண வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த முடிவெடுத்து, ஊரக வளர்ச்சித் துறை அனுமதி பெற்றது.முதலில் ஊராட்சி நிர்வாகமே, கட்டணம் வசூலிக்க திட்டமிட்டது. பின், பொது ஏலத்தில், ஆண்டு குத்தகைக்கு அளிக்க முடிவெடுத்து, அதற்கு ஏற்பாடு செய்தது.ஊராட்சித் தலைர் ரேவதியின் கணவரான அ.தி.மு.க., பிரமுகர் சாமிநாதனுடன், இப்பகுதி தி.மு.க., பிரமுகரான ஒன்றிய வார்டு கவுன்சிலருக்கு, உள்ளாட்சித் தேர்தல் பகை இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தி.மு.க., பிரமுகர் பொது ஏலம் நடத்தவிடாமல் முட்டுக்கட்டையாக இருந்ததாக கூறப்படுகிறது.தி.மு.க., பிரமுகர் தலையீடு காரணமாக, வட்டார வளர்ச்சி நிர்வாக அதிகாரிகள், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது. அதனால், ஓராண்டாக பொது ஏலம் நடத்தப்படாமல் முடங்கியிருந்தது.இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் ஊராட்சித் தலைவர் வழக்கு தொடர்ந்து, உத்தரவு பெற்று, நேற்று பொது ஏலம் நடத்த அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், தி.மு.க., பிரமுகரின் முட்டுக்கட்டையால், நிர்வாக காரணங்களுக்காக மறு ஏல தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவித்து, நேற்று ஏலம் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.