உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி:வாயலூர் பாலத்தில் குவிந்துள்ள மணல் குவியல் அகற்றப்படுமா?

செங்கல்பட்டு: புகார் பெட்டி:வாயலூர் பாலத்தில் குவிந்துள்ள மணல் குவியல் அகற்றப்படுமா?

வாயலுார் பாலத்தில் குவிந்துள்ள மணல் குவியல் அகற்றப்படுமா?

கூவத்துார் அருகே வாயலுார் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில் பாலாற்றை கடக்கும் பாலம் உள்ளது. இந்த பாலத்தில், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.சாலையில் செல்லும் லாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் மற்றும் மணல் சிதறி, பாலத்தில் சாலை ஓரத்திலேயே தேங்கி உள்ளன.இதனால், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரத்தில் உள்ள மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.கந்தன், கூவத்துார்.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வங்கி சேவை ஏற்படுத்தப்படுமா?

வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டு, சகல வசதிகளுடன் உள்ளது.இந்த பேருந்து நிலைய வளாகத்தில், வங்கி சேவைகள், ஏ.டி.எம்., மையங்கள் இல்லாதது ஒரு குறையாக உள்ளது. சாமானிய மக்கள் கூகுள்பே உள்ளிட்ட ஆன்லைன் மொபைல் ஆப் வைத்திருப்பது இல்லை.எனவே, பேருந்து நிலையத்தில் பயணியருக்கு நிரந்தரமாக வங்கி சேவை தேவை. இதை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, உடனடியாக வங்கி சேவை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சரவணன், ஊரப்பாக்கம்.

மழைநீர் கால்வாயில் தேங்கிய குப்பையை அகற்ற வேண்டுகோள்

பவுஞ்சூர் பஜார் பகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே, மதுராந்தகம் - கூவத்துார் நெடுஞ்சாலை ஓரத்தில், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த மழைநீர் கால்வாய் பராமரிப்பு இல்லாமல், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பை குவிந்து உள்ளன.இதனால், மழைக்காலங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளதால், துறை சார்ந்த அதிகாரிகள் கால்வாயில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சே.நாராயணன், செய்யூர்.

மின் கம்பத்தை மாற்றியமைக்காமல் பனங்கொட்டூரில் சிமென்ட் சாலை

மறைமலை நகர் நகராட்சி, பனங்கொட்டூர் கிராமத்தில், திருக்கச்சூர் செல்லும் சாலையில் உள்ள குறுக்கு தெருவில், சில மாதங்களுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.சாலை அமைக்கும் போது, சாலை நடுவே இருந்த மின் கம்பம் மாற்றியமைக்கப்படாமல், புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதன் காரணமாக, இந்த தெருவில் பெரிய வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளன. எனவே, இந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க, மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.கோபால், மறைமலை நகர்.

குண்டும், குழியுமாக காணப்படும் செங்காடு சாலை சீரமைக்கப்படுமா?

திருப்போரூர் - -இள்ளலுார் சாலையில் இருந்து செல்லும் செங்காடு சாலை, 3 கி.மீ., துாரம் உடையது. இதில், 2 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட்டது. 1 கி.மீ., சாலை மேம்படுத்தப்படாமல், குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இதனால், மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வோர் மற்றும் கோமா நகர், தையூர், காயார் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர்.எனவே, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.கணேஷ், திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்