| ADDED : டிச 08, 2025 06:44 AM
சென்னை: ராஜஸ்தானில் நடந்து முடிந்த 'கேலோ இந்தியா' பல்கலை விளையாட்டு போட்டியில், தமிழக அளவில் சென்னை பல்கலை அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது. மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு சார்பில், கேலோ இந்தியா பல்கலை விளையாட்டு போட்டியின் ஐந்தாவது தொடர்,கடந்த நவ., 24ல் துவங்கி கடந்த 5ம் தேதி நிறைவடைந்தது. போட்டிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தன. இதில், தமிழகத்தின் சென்னை பல்கலை, எஸ்.ஆர்.எம்., பல்கலை, வேல்ஸ் உட்பட நாடு முழுதும் இருந்து, 300க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்றன. தடகளம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ் உள்ளிட்ட 23 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதுவரை நடந்த அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை பல்கலை அணி, இரண்டு தங்கம், ஆறு வெள்ளி, 10 வெண்கலம் என, மொத்தம் 18 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக 19வது இடத்தை கைப்பற்றியது. தமிழக அளவில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. குறிப்பாக, தடகளம் மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தங்கம் வென்றிருந்தது.