உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லபுரத்தில் சிட்கோ சிற்ப பூங்கா திட்டம்... இழுபறி! :அலட்சிய அதிகாரிகளால் சிற்ப கலைஞர்கள் அதிருப்தி

மாமல்லபுரத்தில் சிட்கோ சிற்ப பூங்கா திட்டம்... இழுபறி! :அலட்சிய அதிகாரிகளால் சிற்ப கலைஞர்கள் அதிருப்தி

மாமல்லபுரம்:மாமல்லபுரம் சிற்பக் கூடங்களுக்காக அறிவிக்கப்பட்ட,'சிட்கோ' சிற்ப பூங்கா திட்டம், மூன்றாண்டுகள் கடந்தும் கிடப்பில் உள்ளது. இதனால், சிற்பக் கலைஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டுகளில் பல்லவ மன்னர்கள், காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். அக்காலத்தில், கடற்கரை பகுதி மாமல்லபுரம், அவர்களின் துறைமுகப்பட்டினமாக விளங்கியது.இங்குள்ள சிறியதும், பெரியதுமான பாறைக் குன்றுகளில், பல்லவர்கள் பல்வேறு சிற்பக் கலைகளை படைத்தனர். தற்போது, பாரம்பரிய நினைவுச் சின்னமாக விளங்கும் இந்த சிற்பங்களை, இன்றைய தலைமுறையினர் கண்டு ரசிக்கின்றனர். பல்லவர்கள் உருவாக்கிய அன்றைய கற்சிற்பக் கலை, தற்காலத்திலும் சிறந்து விளங்குகிறது.மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், சிற்பக்கூடங்கள் ஏராளமாக செயல்படுகின்றன. சிற்பக்கலைத் தொழிலில், 3,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழில் மேம்பாடு அடைந்துள்ளதால், சிற்பக்கூடங்களும் பெருகுகின்றன. இச்சூழலில், பாரம்பரிய கைவினை கைத்தொழிலுக்கு, முறையான வரைமுறை வகுக்கப்படவில்லை. வழிகாட்டுத் திட்டங்களும் இல்லை.பெரும்பாலான சிற்பக்கூடங்கள், பிரதான சாலைகளை ஒட்டியே அமைந்துள்ளன. இயந்திரங்களால் கல்லை அறுப்பது, செதுக்குவது போன்ற பணிகளை மேற்கொள்வதால் கல் துகள்கள் பரவி, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.சாலை பகுதிகளில் கற்கள் குவிக்கப்பட்டு, இடையூறு ஏற்படுகிறது.இதையடுத்து, சிற்பக்கூடங்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து வரைமுறைப்படுத்தவும், சிற்பத் தொழிலை மேம்படுத்தவும், தமிழக அரசு முடிவெடுத்தது.இதையடுத்து, தமிழக அரசின், 'சிட்கோ' நிறுவனம் சார்பில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில், 23 கோடி ரூபாய் மதிப்பில், 'சிட்கோ' சிற்ப பூங்கா அமைப்பதாக, கடந்த 2021ல் சட்டசபையில் அறிவித்தது. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதி, புதுச்சேரி சாலையை ஒட்டி, 21 ஏக்கர் இடம் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு, அங்கு இத்திட்டத்திற்கான பெயர்ப்பலகையும் அமைக்கப்பட்டது.ஆனால், தற்போது வரை திட்டம் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின் போது, சிற்பக் கலைஞர்களின் ஓட்டுகளை கவர கருதி, திட்டப் பணிகளை துவக்கும் போர்வையில், அங்கு வளர்ந்திருந்த முட்புதரை மட்டும் அகற்றினர்; வேறு எந்த பணியையும் துவக்கவில்லை.இந்நிலையில், நிறுவன நிர்வாக குளறுபடிகளால் இத்திட்டம் காலதாமதமாவதாகவும், இறுதியில் கைவிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இப்பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடம், தி.மு.க., தலைமையகம் அமைய உள்ளதாக கூறப்படும் இடத்தை ஒட்டியே உள்ளது. அதனால், தொழிற்பேட்டையால் இடையூறு ஏற்படலாம் எனக் கருதி, இத்திட்டம் தவிர்க்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.இதுகுறித்து, திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சிற்பக்கூட உரிமையாளர்கள் கூறியதாவது:கைவினைத் தொழிலின் சிறப்பு, முக்கியத்துவம் கருதி, அரசு சார்பில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பரப்பில் இலவச இடம் அளிக்கப்படும் என எதிர்பார்த்தோம்.ஆனால், 'சிட்கோ'விடமே இடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனமே, தொழிற்பேட்டையை உருவாக்குகிறது. யாருக்கு எவ்வளவு பரப்பில் இடம் தேவை என, நிறுவன அதிகாரிகள் எங்களிடம் கேட்டனர்.எங்களுக்கு தேவைப்படும் இடத்திற்கான தொகையை செலுத்தினால், அவரவர் பெயரில் இடத்தை பதிவு செய்வதாக தெரிவித்ததால், நாங்களும் அதற்கு ஒப்புக் கொண்டோம்.அதன் பின் அதிகாரிகள், இடத்தை விலைக்கு அளிக்க மறுத்து, வாடகைக்கு அளிப்பதாக தெரிவித்தனர்.சொந்த இடத்தில் சிற்பக்கூடம் நடத்தும் எங்களுக்கு, அரசு அளிக்கும் வாடகை இடம் தேவைப்படாது. இதுபற்றி ஓராண்டிற்கு முன் எங்களிடம் ஆலோசித்த அதிகாரிகள், அதன் பின் எங்களைத் தொடர்பு கொள்ளாமல், அலட்சியமாக உள்ளனர். இந்த திட்டமும் கேள்விக்குறியாகவே உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை