கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இணைக்கும் வகையில், 74.5 கோடி ரூபாயில் புதிய நடை மேம்பாலம் அமைய உள்ளது. அதற்கான பூமி பூஜை நடந்தது.ஜி.எஸ்.டி., சாலையின் குறுக்கே, 140 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலத்தில் அமைய உள்ள இப்பாலத்தில், பயணியர் வசதிக்காக நகரும் படிகட்டுகள் மற்றும் மின்துாக்கிகள் அமைய உள்ளன.அதற்கான கட்டுமானப் பணிகள் நேற்று துவங்கின. 12 மாதங்களுக்குள் முடித்து, பயணியர் வசதிக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவு பெற்றவுடன், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து, பேருந்து நிலையத்திற்கு பயணியர் எளிதாக வந்து செல்ல முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரில், பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய நீருற்று பூங்கா திறக்கப்பட்டது.மொத்தம் 12.8 கோடி ரூபாய் செலவில், 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் நடைபாதை, அலங்கார பூச்செடிகள், அமரும் பலகைகள், குழந்தைகளுக்கான நீரூற்று, சதுரங்க சிற்பங்கள், குளம், கால்வாய்கள், வண்ணமயமான விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.
பஸ் நிலையத்திற்குள் வராத பேருந்துகள்
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வராமல், ஜி.எஸ்.டி., சாலையிலேயே பயணியரை ஏற்றி, இறக்கி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து பயணியர் கூறியதாவது:கோயம்பேடிலிருந்து பயணியரை ஏற்றி வரும் ஆம்னி பேருந்துகள், அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுவதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வராமல், ஜி.எஸ்.டி., சாலையில் சென்று விடுகின்றன. இதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் ஏமாற்றம் அடைகின்றனர்.அதேபோல, தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள், அதிகாலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ஜி.எஸ்.டி., சாலையில் பயணியரை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு, நேராக கோயம்பேடு சென்று விடுகின்றனர். அங்கு இறங்கிய பயணியர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு, ஆட்டோ கட்டணமாக 150 முதல் 200 ரூபாய் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.சாலையின் குறுக்கே கடந்து செல்வதை தவிர்க்க, சாலையின் நடுவே நெடுஞ்சாலை துறையினர் நிரந்தர மைய தடுப்புகளை அமைத்துள்ளனர். காலை 9:00 மணிக்கு மேல் பாதுகாப்பு போலீசார் பணியில் இருப்பதால், அனைத்து பேருந்துகளும் நிலையத்திற்குள் செல்ல வேண்டும் என எச்சரித்து அனுப்புகின்றனர்.எனவே, அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வரும் பேருந்துகளும், நிலையத்திற்குள் வந்து பயணியரை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுதொடர்பாக, ஆம்னி பேருந்து ஓட்டுனர் கூறியதாவது:கோயம்பேடில் இருந்து வரும்போது, போரூர் டோல்கேட் மற்றும் பெருங்களத்துார் ஆகிய பகுதிகளில், அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுகின்றன. அதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் கடந்து விடுகிறோம்.அது மட்டுமின்றி, நிலையத்திற்குள் வந்து செல்ல, குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. மேலும், உள்ளே சென்று வர, 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.தாம்பரம் மார்க்கமாக வரும்போது, நிலையத்திற்குள் செல்ல நேர்வழி இல்லை. வண்டலுார் மேம்பாலம் சென்று 'யு - டர்ன்' எடுத்து, கிளாம்பாக்கம் நிலையம் வர வேண்டும். அதோடு, மீண்டும் பெருங்களத்துாருக்கு வர, சங்கரா பள்ளி சிக்னல் வரை அரை கி.மீ., சென்று, யு - டர்ன் எடுத்து தாம்பரம் மார்க்கத்திற்கு வர வேண்டும். இதனால், 2 கி.மீ., வீண் அலைச்சல் ஏற்படுகிறது. அதனால், இதை தவிர்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.