மாமல்லபுரம்: சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணும் இடத்தை தேர்வு செய்ய, கலெக்டர் சினேகா ஆய்வை துவக்கினார். தமிழகத்தில் அடுத்தாண்டு, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் - தனி, செய்யூர் - தனி, சோழிங்கநல்லுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் கருதி கலெக்டர் சினேகா, ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து, சமீபத்தில் பரிசோதித்தார். இதைத்தொடர்ந்து, ஓட்டு எண்ணும் இடத்தை தேர்வு செய்ய, தற்போது ஆய்வை துவக்கி உள்ளார். இதற்காக, மாமல்லபுரம் அடுத்த பையனுாரில் இயங்கிவரும், ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லுாரியில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமாருடன், நேற்று பார்வையிட்டார். இங்குள்ள வகுப்பறைகள், ஓட்டு எண்ணிக்கை நடத்துவதற்கு ஏற்ப உள்ளதா என ஆய்வு செய்தார். கடந்த சட்டசபை தேர்தலின் போது ஓட்டு எண்ணிக்கை நடந்த இடங்கள், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதா, எதற்காக மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். மேலும், சென்னை குடிநீர் தேவைக்காக, மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில், பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி புதிதாக அமைக்கப்பட உள்ள நீர்த்தேக்கத்திற்கான இடங்களையும் பார்வையிட்டார்.