திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள சமூக நீதி விடுதியில் மாணவர்கள் வருகை குறைந்துள்ளதாகக் கூறி, அதை மூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்காக அப்பள்ளி அருகே, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அரசு விடுதி உள்ளது. தற்போது, 'சமூக நீதி விடுதி' என்ற பொதுப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதில், இரண்டு சமையலர், ஒரு துாய்மை பணியாளர், பொறுப்பு வார்டன் பணி செய்கின்றனர். ஆரம்பத்தில், விடுதியில் மாணவர்கள் தங்கி படித்து வந்த நிலையில், நாளடைவில் கிராம பகுதி வளர்ச்சி, போக்குவரத்து வசதி போன்ற பல்வேறு காரணங்களால், தங்கி படிக்கும் சூழல் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்த விடுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், மாணவர்கள் அச்சமடைந்து தங்கி படிப்பதில்லை. மாற்றாக, பள்ளியிலிருந்து, மதிய உணவுக்கு 50 மாணவர்கள் மட்டும் வந்து செல்கின்றனர். மாணவர்கள் வருகையை உறுதிப்படுத்தும் நோக்கில் விடுதிகளில், டிஜிட்டல் வருகை பதிவேடு கடை பிடித்து வருகின்றனர். இதில், மாணவர்கள் வருகை பதிவு குறைவாக உள்ளதாகக் கூறி, விடுதி மூடப்படுவதற்கான சூழல் உருவாகும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. எனவே, விடுதியில், மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக, பாதுகாப்பு கட்டமைப்புடன் தனி வார்டன், பாதுகாவலர் நியமித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.