மேலும் செய்திகள்
வையாவூர் சமூக நலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை
28-Dec-2025
உதவி பேராசிரியர் தேர்வில் 128 பேர் ஆப்சென்ட்
28-Dec-2025
இன்று இனிதாக ... (28.12.2025) செங்கல்பட்டு
28-Dec-2025
வடமாநில தொழிலாளி லாரி மோதி பலி
28-Dec-2025
மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் உதவி மையங்கள் முறையாக செயல்படாததால், கடந்த ஓராண்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில், 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. குற்ற சம்பவங்களை தடுக்க, காவல் உதவி மையங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனரம் என, இரண்டு காவல் அமைப்புகள் உள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுப்பாட்டில் 20 காவல் நிலையங்களும், தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில் 25 காவல் நிலையங்களும் உள்ளன. இவற்றில் கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஓட்டேரி, சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு தாலுகா, செங்கல்பட்டு நகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள், அதிக குற்றச் சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளாக உள்ளன. சுழற்சி முறை இப்பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க, அந்தந்த காவல் நிலையத்தின் எல்லைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் தரப்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், சுழற்சி முறையில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில், நான்கு போலீசார் பணியில் ஈடுபட்டு வாகன தணிக்கை மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் போலீசார் அனைத்து பகுதிகளிலும் பிரிந்து பணியில் ஈடுபட, காவல் உதவி மையங்கள் உதவியாக இருந்தன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த காவல் உதவி மையங்களில் போலீசார் பணியில் இல்லாமல், மூடப்பட்டு வீணாகி வருகின்றன. இதனால், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை, சென்னையை ஒட்டிய வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு மாமல்லபுரம், திருப்போரூர், மதுராந்தகம், மேல்மருவத்துார், மகேந்திரா வேல்டு சிட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன. செங்கல்பட்டு நகர பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு தினமும் மொபைல் போன் பறிப்பு, பைக் திருட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், ஆத்துார், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில், கஞ்சா விற்பனை உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. காட்சிப் பொருள் இதை தடுக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி காவல் நிலையங்களில் பணியில் இருந்த ஆய்வாளர்கள், தங்களின் காவல் நிலைய எல்லைகளில் தனியார் நிறுவனங்களின் நிதி மூலமாக, காவல் உதவி மையங்கள் அமைத்தனர். அங்கு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன. துவக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட இந்த காவல் உதவி மையங்கள், அதிகாரிகள் மாறுதலுக்குப் பின், வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. இதனால், கடந்த ஓராண்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில், 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. தற்போது, நெடுஞ்சாலையில் உள்ள காவல் உதவி மையங்களில், முதல்வர் மற்றும் கவர்னர் செல்லும் போது மட்டும், போலீசார் பணியில் உள்ளனர். அதே போல மாத இறுதியில், வாகனங்களுக்கு அபராதம் விதிக்க மட்டுமே, காவல் உதவி மையங்களை பயன்படுத்தி வருகின்றனர். எல்லை பகுதியில், காவல் உதவி மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தால், புதிதாக வரும் வாகனங்கள், நபர்கள் குறித்த கண்காணிப்பு இருக்கும். இதனால், நகருக்குள் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த காவல் உதவி மையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அனைத்து பகுதிகளிலும், போலீசார் ரோந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்தாண்டு கொள்ளை சம்பவங்கள் ↓கடந்த மார்ச் மாதம் செங்கல்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில், பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகை, 1.10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. ↓மார்ச் 29ம் தேதி, கொளப்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, 15 சவரன் திருடப்பட்டது. ↓மார்ச் 31ம் தேதி, கூடுவாஞ்சேரி, பெரியார் நகரில், 15 சவரனும், ஊரப்பாக்கத்தில் ரயில்வே ஊழியர் வீட்டில் 7 சவரனும் திருடப்பட்டது. ↓ஏப்., 6ம் தேதி, ஆப்பூர் கிராமத்தில் ஏ.சி., மெக்கானிக் வீட்டில் குடும்பத்துடன் துாங்கிய போது, கதவை உடைத்து பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள், 1.5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. ↓ஏப்., 7ம் தேதி இரவு, செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து 53,000 ரூபாய் திருடப்பட்டது. ↓ஏப்., 27ம் தேதி, மறைமலை நகர் நகராட்சி அதியமான் தெருவில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 22 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டன. ↓மே 26ம் தேதி ஆத்துாரில், பிரகாஷ் என்பவர் வீட்டில், 50 சவரன் தங்க நகைகள், 18,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டன. ↓ஜூன் 23ம் தேதி, சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூரில், முருகையன் என்பவர் வீட்டில், 35 சவரன் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. ↓ஜூன் 24ம் தேதி இதே பகுதி வி.ஐ.பி., நகர் பகுதியில், மகாவீர் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 27 சவரன் தங்க நகைகள், 1.10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. திருப்போரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொட்டமேடு கிராமத்தில், அடுத்தடுத்த வீட்டின் பூட்டை உடைத்து, 16 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வேங்கட மங்கலம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, 4 சவரன் தங்க நகைகள், 20,000 ரூபாய் திருடப்பட்டது. ↓ஜூலை 1ம் தேதி வடகால் கிராமத்தில் இரவு நேரத்தில், முதியவர்கள் வசித்த வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. ↓ஆக., மாதம் சிங்கபெருமாள் கோவிலில், தி.மு.க., பிரமுகர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. ↓அக்., மாதம் கருநிலம் கிராமத்தில், விவசாயி வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டன. ↓கடந்த வாரம் செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லையில், அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில், 14 சவரன் தங்க நகையும், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லையிலுள்ள மேலமையூரில், இரு வீடுகளில் 26 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோன்று, இன்னும் பல சிறு திருட்டுகளையும் சேர்த்து, 500 சவரன் நகைகளுக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. இந்த கொள்ளை சம்பவங்களில் பெரும்பாலானவை, இரவு நேரங்களில் பூட்டிய வீட்டை குறி வைத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்களில், சிங்கபெருமாள் கோவிலில் திருடப்பட்ட 120 சவரன் நகை மட்டுமே, போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற திருட்டு வழக்குகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025