| ADDED : டிச 04, 2025 02:45 AM
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில், நாய்கள் துரத்தியதால் தப்பிச் செல்ல முயன்ற மான் கீழே விழுந்ததில், காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. அச்சிறுபாக்கம் அருகே சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள வஜ்ரகிரி மலை அடிவாரத்தில், 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சமூக காடு உள்ளது. இப்பகுதியில் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. நேற்று, அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட மலைநகர் பகுதியில் உள்ள சமூக காட்டில் இருந்து உணவு தேடிச் சென்ற மானை, மலைநகர் பகுதியில் இருந்த நாய்கள் துரத்தியுள்ளன. இதனால், நாய்களிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற மான், கீழே விழுந்தது. இதில், பின் பக்க காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பகுதி பொதுமக்கள் அச்சிறுபாக்கம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்படி, அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர், நான்கு வயது ஆண் மானை மீட்டு, அச்சிறுபாக்கம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.