வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து குறைவு கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த ஏரி 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்டதாகும். தற்போது 4 அடிக்கும் குறைவாக தண்ணீர் உள்ளது. அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் பறவைகள் வரத்து துவங்கியதால் சீசன் துவங்கியது. இதில், வேடந்தாங்கல் ஏரிக்கு, வளையப்புத்துார் ஏரியிலிருந்து வரத்து கால்வாய் வாயிலாக வரும் நீர் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேலும், பங்களா கால்வாய் பகுதியில் தனிநபர் ஆக்கிரமிப்பு மற்றும் மேட்டு குடிசை பகுதியில் இருந்து வரும் தண்ணீர், விநாயகநல்லுாரில் இருந்து வேடந்தாங்கல் வழியாக ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, வளையப்புத்துார் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இன்னும், ஒரு அடி தண்ணீர் நிரம்பினால், ஏரியிலிருந்து கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறும் வகையில் நீர் நிரம்பியுள்ளது. ஆனால், வளையப்புத்துார் ஏரியிலிருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் செல்லும் வரத்து கால்வாய் துார்வாரப்படாமல், செடிகள் வளர்ந்து துார்ந்து உள்ளது. எனவே, வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் செல்லும், வரத்து கால்வாயினை துார்வாரி சீரமைக்க, வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.