உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி ஒன்றரை ஆண்டாக மந்தம் ஏமாற்றம்: இந்த தீபாவளிக்கும் வராததால் பயணியர் திண்டாடும் அவலம்

கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி ஒன்றரை ஆண்டாக மந்தம் ஏமாற்றம்: இந்த தீபாவளிக்கும் வராததால் பயணியர் திண்டாடும் அவலம்

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய கட்டுமான பணிகள், ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் முடியாமல், மந்தகதியில் நடந்து வருகின்றன. இதனால், அடுத்தடுத்து வரவுள்ள ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு வெளியூர் செல்வோர், திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலுக்குத் தீர்வாக, கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் கட்டி, 2023 டிசம்பரில் திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்குச் செல்லும் 90 சதவீத அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன. இந்நிலையத்திற்கு அருகில், மின்சார ரயில் நிலையம் இணைப்பு வசதி இல்லை. பிராட்வே, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்குச் செல்வதற்கு ஏற்ப ரயில் நிலையம் இருந்தால் வசதியாக இருக்கும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து 150 மீ., தொலைவில் உள்ள ரயில் இருப்பு பாதையில், புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள், 2024, ஜனவரி மாதம் துவங்கின. அதன்படி, வண்டலுார் - ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே, இரண்டு நடைமேடைகள் தலா ஆறு கோடி ரூபாய், மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட இதர கட்டுமானங்கள் 10 கோடி ரூபாய் என, மொத்தம் 22 கோடி ரூபாய் செலவில், ரயில்வே நிர்வாகம் பணிகளை துவக்கியது. கடந்தாண்டு ஆக., மாதமே பணிகளை முடிக்க வேண்டிய நிலையில், தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் அமைக்கப்படும் நடைமேடை பணிகள் 70 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கத்திற்கான நடைமேடை பணிகள் இப்போது தான் துவக்கப்பட்டு உள்ளன. நடைமேடை பணி முடிந்த பின், இரண்டு நடைமேடைகளையும் இணைக்கும் வகையில், உயர்மட்ட நடைபாதை அமைக்க வேண்டும். தொடர்ந்து, மின் இணைப்பு, பயணச்சீட்டு அலுவலகம், பயணியருக்கான வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வளவு பணிகள் இருக்கும் நிலையில், திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. அதேபோல், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும், பேருந்து முனையத்தையும் நேரடியாக இணைக்கும் வகையில், 280 மீ., நீளத்தில், மேற்கூரையுடன் உயர்மட்ட நடைபாதை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் சி.எம்.டி.ஏ., நிர்வாகத்தால், 2024 நவம்பரில் துவக்கப்பட்டன. இந்நிலையில், உயர்மட்ட நடைபாதை அமைப்பதற்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்ட தனியார் நிலத்திற்கு, சந்தை மதிப்பில் இழப்பீட்டு தொகை கோரப்பட்டதால், அந்த பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் நடக்கும் ரயில் நிலைய கட்டுமான பணிகள் ஆமை வேகத்திலும், தமிழக அரசின் சார்பில் நடக்கும் உயர்மட்ட நடைபாதை பணிகள் நத்தை வேகத்திலும் நடக்கின்றன. இதனால், சென்னையில் இருந்து வெளியூருக்கு, அடுத்தடுத்து வரும் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை நாட்களில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு நேரடியாக வர ரயில் வசதி கிடைக்காமல், பயணியர் திண்டாடும் நிலை உள்ளது. அதனால் அவர்கள், ஆட்டோ அல்லது கால் டாக்சி சேவைகளை பயன்படுத்தி, கூடுதல் ரூபாய் செலவழித்து, கிளாம்பாக்கத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு தீபாவளிக்கு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என பெரிதும் நம்பியிருந்த பயணியருக்கு, ஒன்றரை ஆண்டு கடந்தும் பணி முடியாதது, ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வண்டலுார் - கூடுவாஞ்சேரி இடையே கிளாம்பாக்கத்தில் நடந்துவரும் புதிய ரயில் நிலையம் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றனர். கனியிருக்க காய் எதற்கு? கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து, ரயில் நிலையத்திற்குச் செல்ல, 15 அடி அகலம், 150 மீ., உள்ள மனுநீதி சோழன் தெரு உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து இந்த தெரு வழியாக நடந்தால், மூன்றே நிமிடங்களில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை அடைந்து விடலாம். தவிர, ஜி.எஸ்.டி., சாலையைக் கடப்பதற்கு மட்டும் சுரங்கப்பாதை அல்லது 50 மீ., நீளமுள்ள உயர்மட்ட நடைமேம்பாலம் அமைத்துக் கொள்ளலாம். தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட நடைபாதை வழியாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வருவதை விட, மனுநீதி சோழன் தெரு வழியாக வருவது எளிது; துாரமும் மிகக் குறைவு. மேலும், மனுநீதி சோழன் தெரு அடியில், சுரங்கம் அமைத்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வருவதற்கு நேரடி பாதை அமைத்திருக்கலாம். ஆனால், ஒதுக்குப்புறம் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் உயர்மட்ட நடைபாதை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது, கனி இருக்க காய் எதற்கு என, பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !