மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
திருப்போரூர்: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க.,வை கண்டித்தும் தி.மு.க., கூட்டணி கட்சிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. திருப்போரூர் ரவுண்டானா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருப்போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் இதயவர்மன் தலைமை வகித்தார். இதில், தி.மு.க., ம.தி.மு.க, காங்., வி.சி.., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், 100 நாள் பணியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் சந்தானம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு தி.மு.க.,- - எம்.எல்.ஏ., வரலட்சுமி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.