அடிப்படை வசதி செய்து தரக்கோரி வையாவூர் கிராமத்தில் வலியுறுத்தல்
மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு வையாவூர் ஊராட்சி உள்ளது. வையாவூர் ஊராட்சியில், ஊராட்சி தலைவராக காமராஜ் என்பவர் இருந்து வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கிராம மக்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என, ஊராட்சி தலைவர் மீது, 9 வார்டு உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்திருந்தனர்.இந்நிலையில், கடந்த மாதம், சுதந்திர தின விழாவையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தை, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 9 பேர், கருப்பு உடை அணிந்து வந்து, புறக்கணித்தனர். இதனால், கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.இந்நிலையில், கிராம சபை கூட்டத்தை நடத்தக்கோரி, ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர்.அதன்படி, கலெக்டரின் உத்தரவின்படி, நேற்று வையாவூர் ஊராட்சிக்குட்பட்ட கொலம்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலரான கிராம ஊராட்சி பொறுப்பு பாரதி, ஊரக வளர்ச்சி துணை இயக்குனர் தணிக்கை பிரபாகரன் தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில், ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அதில், வையாவூர் ஊராட்சியில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, வேலை வழங்கிட வேண்டும்.குடிநீர் வசதி செய்து தர வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை துார்வாரி, சுத்தம் செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், விரைவில் கோரிக்கைகள் நிவர்த்தி செய்து தரப்படும் என, தெரிவித்தனர்.