மானாமதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மானாமதி ஊராட்சியில் அடங்கிய பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பில் நெல்சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல், சுற்று வட்டார கிராமங்களிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், மானாமதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:மானாமதி உள்ளிட்ட கிராமபகுதிகள் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் வராமல் தடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அவசர தேவைக்கு தனியாரில் விற்பனை செய்ய வேண்டி நிலை ஏற்படுகிறது. அங்கு குறைவான விலைக்கு விற்க்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களுக்கு பின், நெல் சாகுபடி முடிந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும். அறுவடைக்கு முன் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்தால், விவசாயிகள் நெல் புரோக்கர்களிடம் சிக்காமல், நேரடி கொள்முதல் செய்ய ஏதுவாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் நலன் கருதி, நேரடி கொள்முதல் நிலையத்தை போர்க்கால அடிப்படையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அவர்கள் கூறினர்.