மேலும் செய்திகள்
சரக்கு வாகனங்களால் இடையூறு
14-Jun-2025
மறைமலை நகர்:செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை ஒட்டி, பாலுார் ரயில் நிலையம் அருகில், ரயில்வே துறையின் குடிநீர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இங்கு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் வந்து, தண்ணீர் பாட்டில்களை ஏற்றிச் செல்கின்றன.இவ்வாறு வரும் சரக்கு வாகனங்கள் நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்படுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, சரக்கு வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், இரவில் இருள் சூழ்ந்து உள்ளது. அந்த நேரங்களில் சாலை வளைவில் நிறுத்தப்பட்டு உள்ள சரக்கு வாகனங்கள் தெரியாமல், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.கடந்த மாதம் பாலுார் பகுதியைச் சேர்ந்த நபர் விபத்தில் சிக்கி, கால் முறிவு ஏற்பட்டு, அவரது வாகனமும் முழுதும் சேதமடைந்தது. எனவே, இந்த பகுதியில் சரக்கு வாகனங்களை நிறுத்த போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
14-Jun-2025