பூட்டியே கிடக்கும் உரக்கிடங்கு பெருங்களத்துாரில் நிதி வீணடிப்பு
பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துாரில் சாலையே இல்லாத இடத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உரக்கிடங்கு, பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதால், மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், பெருங்களத்துார், 54, 55 வார்டுகளில் சேகரமாகும் குப்பை, தாம்பரம் கன்னடப்பாளையம் கிடங்கிற்கு செல்கிறது. இந்த வார்டு குப்பையில் இருந்து உரம் தயாரிக்க வசதியாக, 55வது வார்டு, மெட்ரோ கிளாசிக் ஹவுசிங் லே - அவுட்டில் உள்ள அரசு இடத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் உரக்கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இதற்காக, பல லட்சம் ரூபாய் செலவில் இயந்திரங்கள் வாங்கப்பட்டு, கட்டடத்திற்குள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த உரக்கிடங்கிற்கு செல்ல சாலை வசதி இல்லை. மண் சாலையில் தான் செல்ல வேண்டும். அடிக்கடி பெய்து வரும் மழையால், மண் சாலை சேறும், சகதியுமாக மாறி, நடந்து செல்வதற்கு கூட முடியவில்லை. அதனால், உரக்கிடங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், ஒரு வருடத்திற்கு மேலாக பூட்டியே வைத்துள்ளனர். முறையான சாலையே இல்லாத இடத்தில், உரக்கிடங்கு அமைக்க யார் அனுமதி அளித்தது என்பது குறித்தும், அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே அந்த உரக்கிடங்கு பூட்டியே வைக்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அங்கு சாலை அமைத்து, விரைவில் உரக்கிடங்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என, கூறுகின்றனர். ஆனால், கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும், ஏன் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு அதிகாரிகளிடம் பதில் இல்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட உரக்கிடங்கை, மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்து, சாலை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.