விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் நிரப்பும் வனத்துறை
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வனச்சரகத்திற்கு உட்பட இள்ளலுார், மாம்பாக்கம், சோனலுார் உள்ளிட்ட பகுதிகளில், 12,000 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதிகள் அமைந்துள்ளன.இங்கு, மான் உள்ளிட்ட பல்வேறு விதமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.இந்த விலங்குகள் வனச்சரக எல்லைகளில் உள்ள ஏரி, குளம், குட்டை, நீரோடைகளில் நீரை பருகி தாகம் தீர்த்து வருகின்றன.மேலும், வனத்துறை சார்பில் வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக, வனப்பகுதிகளில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஆனாலும் கோடைக்காலம் என்பதால், அவை தண்ணீரின்றி வறண்டு காணப்படும். இதனால், வனவிலங்குகள் குடிநீருக்காக நீர்நிலைகளைத் தேடி ஊருக்குள் புகும் சூழலும் ஏற்படும்.எனவே, நீர்நிலை வற்றிய பகுதிகளில் வனவிலங்குகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் முடிவு செய்தனர்.இதற்காக, திருப்போரூர் வனச்சரக அலுவலர் செந்தில் மற்றும் ஊழியர்கள், வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் டிராக்டர் வாயிலாக தண்ணீர் கொண்டு சென்று நிரப்பி வருகின்றனர்.