வனம், விலங்குகளை பற்றி அறிய வாய்ப்பு வண்டலுார் பூங்காவில் இலவச வகுப்பு
தாம்பரம்:அரசு பள்ளி மாணவ - மாணவியர், வனம் மற்றும் விலங்குகளை பற்றி அறிந்து கொள்ள வசதியாக, வண்டலுார் பூங்காவில் திங்கட்கிழமைதோறும் இலவச வகுப்பு நடத்தப்படுகிறது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், பாலுாட்டிகள், ஊர்வன, பறவைகள், ஊன் உண்ணிகள் என, 2,400 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. வார நாட்களில், 3,000 வரையிலும், விடுமுறை நாட்களில், 7,500 முதல் 9,000 வரையிலும், பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். பள்ளி மாணவ - மாணவியர் இடையே வனம் மற்றும் விலங்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, திங்கள் கிழமைதோறும் இலவசமாக வனம் மற்றும் விலங்குகள் குறித்து வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த வகுப்பில், விலங்குகள் மற்றும் வனம் தொடர்பான தகவல்கள் மற்றும் திரையின் வாயிலாக விளக்கப்படுவதோடு, பூங்காவை சுற்றியும் காண்பிக்கப்படும். ஒரு நாளைக்கு, 50 மாணவ - மாணவியர் கொண்ட குழுவிற்கு மட்டுமே அனுமதி. இதில் பங்கேற்க, https://aazp.in/zoo-venture/ என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனால், தங்களது பள்ளி மாணவ - மாணவியர், இந்த வகுப்பில் பங்கேற்று, வனம் மற்றும் விலங்குகள் தொடர்பான விழிப்புணர்வு பெற விரும்பும் ஆசிரியர்கள், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து, பயனடையலாம்.