உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குழாய்களை சீரமைக்க ரூ.12.45 கோடி நிதி வழங்க நெடுஞ்சாலை துறை தாமதம் கூடுவாஞ்சேரியில் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல்

குழாய்களை சீரமைக்க ரூ.12.45 கோடி நிதி வழங்க நெடுஞ்சாலை துறை தாமதம் கூடுவாஞ்சேரியில் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சிக்கு, 1979ம் ஆண்டு, கூட்டு குடிநீர் திட்டம் மூலம், நெரும்பூர், ஆயப்பாக்கம் பகுதி பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை அருகில் குழாய் அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.நந்திவரம்-- கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிக்கு, 1988ம் ஆண்டு, கூட்டு குடிநீர் திட்டம் மூலம், மாமண்டூர் பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்தனர்.இங்கு நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் வினியோகம் செய்கின்றனர். இதில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு, தினமும் 6.8 லட்சம் லிட்டர் குடிநீர் மற்றும் சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிக்கு, 4 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டங்களை, தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை பெருங்களத்துார் -- செட்டிப்புண்ணியம் வரை, தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.இந்த பணியின்போது, சிங்கபெருமாள் கோவில் -- கூடுவாஞ்சேரி வரை, 10 கி.மீ., துாரம் உள்ள குடிநீர் குழாய்கள், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டன. இதனால், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் ஆகிய பகுதிகளுக்கு, குடிநீர் வினியோகம் தடைபட்டது.அதன்பின், உடைந்த பகுதிகளை சரி செய்து, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதிக்கு செல்லும், குடிநீர் குழாய் முழுதுமாக உடைந்து உள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய, கலெக்டர், அரசிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூட்டாக கள ஆய்வு செய்தனர்.ஆய்வுக்குபின், சிங்கபெருமாள் கோவில் ---- கூடுவாஞ்சேரி வரை புதிய இரும்பு பைப்லைன் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய, 12.45 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.இந்த அறிக்கையை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு, குடிநீர் வாரிய அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.இந்த திட்டம், கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.பாலாற்று குடிநீர் இல்லாமல், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை காலத்தை கருத்தில் கொண்டு, குடிநீர் வினியோகம் வழங்க வேண்டும். தற்போது, மாற்று ஏற்பாடாக, பெருமாட்டுநல்லுார் பகுதியில் கிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.- - கார்த்திக்,நகராட்சி தலைவர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி.

நிதி கிடைத்தவுடன் பணிகள்

செங்கல்பட்டு மாவட்ட,- தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவில்- -- கூடுவாஞ்சேரி வரை, தேசிய நெடுஞ்சாலை அருகில் குழாய் அமைத்து, பாலாற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கம் செய்தபோது, குழாய்களை உடைத்து விட்டனர். குழாய் அமைக்க நிதி கேட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்தவுடன் பணிகள் செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை