செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், எழுத, படிக்க தெரியாதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், 9,973 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவர்களுக்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 825 கற்போர் மையங்கள் அமைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை வாயிலாக, மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கணக்கெடுப்பு, கடந்த 2022ம் ஆண்டு நடந்தது.இந்த கணக்கெடுப்பு பணியில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார மைய மேற்பார்வையாளர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.இதில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், ரேஷன் கடை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆகியோரின் தகவல் அடிப்படையில், 2022 -- 23ம் கல்வி ஆண்டில், எழுத, படிக்க தெரியாமல், 14,562 பேர் இருப்பது கண்டறியப்பட்டது.அதேபோல், 2023- - 24ம் கல்வி ஆண்டில், 15 வயதிற்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 13,239 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.அவர்களுக்கு, கற்போர் மையம் சார்பில், தினமும் இரண்டு மணி நேரம் என, 200 வகுப்புகள், ஆறு மாத காலத்திற்கு, தன்னார்வலர்கள் வாயிலாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.இப்பயிற்சி முடித்தவுடன், அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.அவர்களுக்கு, 825 இடங்களில் பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் அமைக்கப்பட்டு, 825 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.இத்திட்டத்தில், அடிப்படை கல்விஅறிவு, எண்ணறிவு, சிக்கலான வாழக்கை திறன்கள், நிதியில் கல்வியறிவு, குழந்தைகள் பராமரிப்பு, கல்வி சுகாதார பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.தொடர்ந்து, 2024- - 25ம் கல்வி ஆண்டில், எழுத, படிக்கத் தெரியாத வயது வந்தோர் கணக்கெடுப்பு பணி, எட்டு வட்டாரங்களில், கடந்த மே மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது.இதில், பெண்கள் 8,500 பேரும், ஆண்கள் 1,473 பேரும் என, 9,973 பேர், எழுத, படிக்க தெரியாமல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.சித்தாமூர் வட்டாரத்தில், புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட கற்போர்களின் எண்ணிக்கை கண்டறியும் கள ஆய்வகத்தை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனர் குமார், கடந்த மே மாதம் 31ம் தேதி ஆய்வு செய்தார்.அப்போது, களப்பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு பயிற்சிகள் குறித்து, ஆலோசனைகள் வழங்கினார்.மாவட்டத்தில், புதிய எழுத்தறிவு திட்டத்தில், எழுத, படிக்க தெரியாத வயது வந்தோர் பற்றிய கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. 825 மையங்களில், 825 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணி முழுமையாக முடிந்தவுடன், பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.- பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி அலுவலர், செங்கல்பட்டு.
பயிற்சி பெற உள்ளவர்கள் விபரம்
வட்டாரம் மொத்தம் ஆண் பெண் கற்போர் மையங்கள்அச்சிறுபாக்கம் 1,610 270 1,340 81மதுராந்தகம் 819 96 723 86சித்தாமூர் 1,002 140 862 79லத்துார் 1,242 217 1,025 79திருக்கழுக்குன்றம் 1,381 189 1,192 123திருப்போரூர் 1,412 243 1,169 96காட்டாங்கொளத்துார் 1,541 193 1,348 96புனிததோமையார்மலை 966 125 841 185மொத்தம் 9,973 1,473 8500 825