உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேடந்தாங்கல் ஏரிக்கரையில் மண் சரிவு கருங்கல் பதிக்க வேண்டியது அவசியம்

வேடந்தாங்கல் ஏரிக்கரையில் மண் சரிவு கருங்கல் பதிக்க வேண்டியது அவசியம்

மதுராந்தகம்:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரிக்கரைப் பகுதியில், மண் சரிவைத் தடுக்கும் வகையில், கருங்கல் பதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், 86 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த பல வகையான பறவைகள் வேடந்தாங்கலில் தங்கின. இங்கு இனப்பெருக்கம் செய்து, தற்போது தங்களின் தாய் நாட்டிற்கு புறப்பட்டுச் செல்கின்றன.கடந்த ஆண்டு, மதுராந்தகம் நெடுஞ்சாலைத் துறையினர், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நுழைவு வாயில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையை அகலப்படுத்தினர்.மேலும், இங்கு மரக்கன்றுகள் நட்டு அழகுபடுத்தினர்.இப்பணிக்காக, ஏரிக்கரை பகுதியில் மண் சரிவைத் தடுக்கும் வகையில் பதிக்கப்பட்டு இருந்த கருங்கற்களை அப்புறப்படுத்தினர்.பணிகள் முடிந்து ஓராண்டாகியும், நெடுஞ்சாலைத் துறையினர் மீண்டும் கருங்கற்களை பதித்து, சீரமைத்து தரவில்லை.இதனால், மழைக் காலங்களில் ஏரிக்கரையில் இருந்து மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையில் வந்து மண் தேங்கி நிற்கிறது.கோடைக்காலத்தில், காற்றின் வேகத்தில் மண் புழுதி பறப்பதால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப் பயணியர் மற்றும் அங்குள்ளவர்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கவனித்து, ஏரிக்கரை பகுதியில் மண்ணரிப்பை தடுக்கும் வகையில் பதிக்கப்பட்டு இருந்த கருங்கற்களை, மீண்டும் அங்கு பதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை