கல்பாக்கம் : கல்பாக்கத்தில், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்டவை இயங்குகின்றன.அவற்றில் பணிபுரிவோர், கல்பாக்கம், அணுபுரம் நகரியங்களில் வசிக்கின்றனர். தங்கள், உறவினர் குடும்ப விழாக்கள், பிற நிகழ்ச்சிகளுக்காக, தொலைதுார ஊர்களுக்கு செல்கின்றனர். மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணியர் வருகின்றனர்.அவர்களுக்கு சேவை வழங்க, மாமல்லபுரத்திலிருந்து கல்பாக்கம் வழியே, கன்னியாகுமரி, கேரள மாநில எர்ணாகுளம், கர்நாடக மாநில பெங்களூரு பகுதிகளுக்கு, 30 ஆண்டுகளுக்கு முன், அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.நாளடைவில் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இது குறித்து பரிசீலித்த அரசு, மாமல்லபுரம் தவிர்த்து, கல்பாக்கத்திலிருந்து நாகர்கோவில், கோயம்புத்துார் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு, பேருந்து சேவையை துவக்கியது. கல்பாக்கம் நகரிய அறக்கட்டளை, இருக்கைக்கு இரண்டு ரூபாய் கமிஷனில், முன்பதிவு செய்தது.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கின் போது, பேருந்துகளை நிறுத்திய அரசு, பின் மீண்டும் இயக்கவில்லை. பயணியர், பிற இடம் சென்று அவதிப்படுகின்றனர்.இப்பகுதி முக்கியத்துவம், பயணியர் தேவை கருதி, நிறுத்தப்பட்ட விரைவுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.