| ADDED : ஜன 07, 2024 12:30 AM
ஆவடி:கொடுங்கையூர், பார்த்தசாரதி ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமிபதி, 73. இவர், கடந்த 2015ல் மத்திய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில் குறிப்பிட்டிருந்ததாவது:திருவள்ளூர் மாவட்டம், விளாங்காடுபாக்கம் கிராமத்தில் என் பெயரில் 1.51 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக, காமராஜ் என்பவரின் மகன் கிருபாகரன், சந்திரபாபு என்பவருக்கு கடந்த 2013ல் தான பத்திரம் செய்து கொடுத்துள்ளார்.பின், சந்திரபாபு 1.48 ஏக்கர் நிலத்தை திப்பு ஜெயந்தி நகர், அனெக்ஸ் -1 என்ற பெயரில், திப்பு ஜெயந்தி நகர் அருகில் உள்ள, சங்கிலி மேடு ஏரி அரசு நிலத்தை போலியான வீட்டு மனைகளாக உருவாக்கினர்.இதையடுத்து, வியாசர்பாடியில் 'ஐ ரியல் ப்ரோமொடேர்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த சரவணன் வாயிலாக, 58 பேருக்கு இந்த மனைகளை விற்பனை செய்துள்ளனர். அதன் மதிப்பு 1.75 கோடி ரூபாய்.போலி ஆவணங்கள் வாயிலாக, அரசு நிலத்தை விற்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், வண்ணாரப்பேட்டை, முனுசாமி கார்டனைச் சேர்ந்த சரவணன், 43, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.