மாமல்லை சுற்றுலா மேம்பாடு திட்டம் தேர்வாகும் இடம் குறித்து டி.ஆர்.ஓ., ஆய்வு
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில், மத்திய அரசு செயல்படுத்தவுள்ள சுவதேஷ் 2.0 திட்டத்திற்கு, அரசுத் துறை இடங்களை ஒதுக்க, மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகைதீன் பார்வையிட்டார்.மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் உள்ளிட்ட பல்லவர் கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் உள்ளன. உள்நாடு, சர்வதேச பயணியர் கண்டு ரசிக்கின்றனர். தற்போது பயணியர் வருகை அதிகரிக்கும் சூழலில், அதற்கேற்ப பயணியர் அடிப்படை வசதிகள் மேம்பாடு இல்லை.சுற்றுலா மேம்பாடு கருதி, முதல்கட்டமாக, கடற்கரை கோவில் அருகில், சுவதேஷ் 2.0 திட்டத்தை, 30 கோடி ரூபாய் மதிப்பிலக் செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்காக நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம், பூங்கா, பிற வசதிகள், கடற்கரை சாலை மேம்பாடு ஆகியவை குறித்து, விரிவான திட்டத்தை தயாரித்தது. அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி, இத்திட்டத்தை, கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி, காஷ்மீர் பகுதியிலிருந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கினார்.இத்திட்டம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம், பேரூராட்சி மற்றும் தொல்லியல்துறை ஆகியவற்றுக்குரிய இடங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. திட்டத்திற்கு இடம் ஒதுக்கும் சிக்கல், ஓராண்டாக நீடிப்பதால், திட்டப் பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இச்சூழலில், பல்துறை இடங்களை விரைந்து ஒதுக்கி, பணிகளை துவக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நேற்று முன்தினம், திட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய இடம் குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகைதீன் ஆய்வு செய்தார். பல்வேறு துறைகளுக்கு, பல புல எண்களில் உள்ள இடங்களை நேரடியாக பார்வையிட்டு, துறை பெயரில் உள்ளதா, வேறு வகைப்பாட்டில் உள்ளதா என, வருவாய்த் துறையினரிடம் கேட்டறிந்தார்.