பஸ் நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறை... அவசியம்! மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களில், பாலுாட்டும் பெண்களுக்காக திறக்கப்பட்ட தனி அறைகளை, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.குழந்தைகளுக்கு பாலுாட்டும் பெண்கள், பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது, பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.அந்த நேரங்களில், பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாலுாட்டும் வகையில், பேருந்து நிலையங்களில் பாலுாட்டும் தனி அறைகள் அமைக்கப்பட்டன.கடந்த 2015ம் ஆண்டு ஜூலையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.அப்போது, மாநிலம் முழுதும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில், பாலுாட்டும் பெண்களுக்கு தனி அறை அமைக்கப்பட்டு, அதில் ஐந்து இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டன.துவக்கத்தில், பாலுாட்டும் பெண்களுக்கான இந்த தனி அறைகளை நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் முறையாக பராமரித்தன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், இவற்றை பராமரிக்காமல் கைவிட்டனர்.குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிகளில், பேருந்து நிலையங்களில் பாலுாட்டும் பெண்கள் தனி அறைகள் அமைக்கப்பட்டன. இவற்றை, பாலுாட்டும் பெண்கள் பயன்படுத்தி வந்தனர்.இதேபோன்று அச்சிறுபாக்கம், இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளிலும் இந்த மையங்கள் செயல்பட்டன.துவக்கப்பட்ட சில மாதங்கள் வரை, இவை நல்ல முறையில் இயங்கின. இந்த அறைகளின் பராமரிப்பை, அடிக்கடி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.மாதந்தோறும் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டங்களில், இந்த அறைகளின் பயன்பாடு குறித்து கேட்கப்பட்டு வந்தது. அதன் பின், யாரும் கண்டுகொள்ளவில்லை.தற்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில், 15க்கும் மேற்பட்ட இடங்களில், பாலுாட்டும் அறைகள் மூடியே உள்ளன.இங்கு, பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய, பெண்கள் பாலுாட்டும் அறைகள் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கிடையில், 2024ம் ஆண்டு, பிப்., 27ல், மாநில அரசுகளின் தலைமை செயலர்களுக்கு, பொது இடங்களில் பாலுாட்டும் அறை அமைக்க, மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சக செயலர் வாயிலாக, சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து, பொது இடங்களில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை கட்டாயம் அமைக்கப்பட்ட வேண்டும். பொது இடங்களில், புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் குழந்தைகள் பராமரிப்பு, தாய்மார்கள் பாலுாட்டும் அறை போன்ற வசதிகளுக்காக, போதுமான இடம் ஒதுக்குவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தலின்படி, ஏற்கனவே உள்ள பாலுாட்டும் மையங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, கூடுதலாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும், பாலுாட்டும் அறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இது தாய்மார்களின் தனியுரிமையை பாதுகாக்கும் என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கடந்த 19ம் தேதி உத்தரவிட்டு உள்ளனர்.
எனவே, பெண்கள் நலன் கருதி, பாலுாட்டும் பெண்கள் தனி அறைகளை, தேவையான இடங்களில் அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.- சமூக ஆர்வலர்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில், நகராட்சி பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள, தாய்மார்கள் பாலுாட்டும் அறைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறைகளை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாலுாட்டும் அறைகளின் பராமரிப்பு குறித்து, நகராட்சி ஊழியர்களால் கண்காணிக்கப்படும்.- நகராட்சி கமிஷனர்கள்,செங்கல்பட்டு மாவட்டம்.