உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நல்லாத்தூர் பாலாற்றில் தடுப்பணை திட்டம்...பரிந்துரை!:மறுதிட்ட மதிப்பீடு ரூ.70 கோடியாக உயர்வு

நல்லாத்தூர் பாலாற்றில் தடுப்பணை திட்டம்...பரிந்துரை!:மறுதிட்ட மதிப்பீடு ரூ.70 கோடியாக உயர்வு

மாமல்லபுரம்:பாலாற்றில் நல்லாத்துார் பகுதியில் மூன்றாவது தடுப்பணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தவிருந்த இத்திட்டம், சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ள பொதுப்பணித்துறை, திட்ட மதிப்பீட்டை 70 கோடி ரூபாய்க்கு உயர்த்தி, தமிழக அரசிடம் பரிந்துரைத்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், பாலாறு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த ஆறு, கர்நாடக மாநிலத்தில் உருவாகி, கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் பகுதியில், வங்க கடலில் கலக்கிறது.பல பகுதிகள் குடிநீர் தேவைக்கும், விவசாய பாசனத்திற்கும், ஆற்றுநீர் பயன்படுகிறது. ஆற்றில், அரசு மணல் குவாரி நடத்தியும், சமூக விரோதிகள் மணல் கடத்தியும், ஆறு அதலபாதாள சுரங்கமாக மாறி பாழானது.

வலியுறுத்தல்

நிலத்தடி நீர்மட்டம், வெகு ஆழத்திற்கு இறங்கியது. ஆற்றில் கடல்நீர் ஊடுருவி மாசடைந்தது. அதனால், வடகிழக்கு பருவமழை காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம், தடுப்பணையின்றி கடலில் கலந்து வீணானது.இதை தவிர்க்கவும், மழைநீரை தேக்கவும் ஆற்று முகத்துவார பகுதியிலும், அடுத்து குறிப்பிட்ட தொலைவிற்கு ஒன்று என, தடுப்பணை அமைக்குமாறு, இப்பகுதி மக்கள் அரசிடம் வலியுறுத்தினர்.அணுசக்தி துறையின் ஊழியர் வசிப்பிட நகரியம், அணுசக்தி தொழில் வளாகம் ஆகிய பகுதிகளுக்கு, பாலாற்றிலிருந்து நீர் வழங்கப்படும் நிலையில், அத்துறை நிதியுதவியில் முகத்துவாரத்தில் தடுப்பணை அமைக்க, தமிழக பொதுப்பணித்துறை முடிவெடுத்தது.கல்பாக்கத்திலிருந்து 5 கி.மீ.,ல் பாலாறு கடப்பதால், அணுசக்தி துறையின் தேவைக்கு, அத்துறையிடம் பொதுப்பணித்துறையின் நிலத்தடிநீர் பிரிவு, குறிப்பிட்ட கட்டணம் பெற்று ஆற்றுநீரை வழங்கி வருகிறது.அணுசக்தி துறைக்கு, பாலாற்று நீர் வழங்கும் பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு நீரேற்று நிலையங்கள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை, நல்லாத்துார் பகுதி பாலாற்றில், கடந்த 1969 முதல் இயங்குகின்றன. இங்கிருந்து, தினசரி 3.5 - 5 மில்லியன் கேலன் நீர், அணுசக்தி துறைக்கு வழங்கப்படுகிறது.நிரந்தர நீராதார அவசியம் கருதி, பொதுப்பணித்துறை, தடுப்பணை அமைக்க நிதி வழங்குமாறு, அணுசக்தி துறையிடம் வலியுறுத்தியது.அத்துறை ஒப்புதல் தெரிவித்தாலும், பொதுப்பணித்துறையின் குளறுபடிகள் காரணமாக, திட்டம் கேள்விக்குறியாகி தாமதமானது. அதனால், ஆறு மேலும் பாழானது. மழைநீர் தேங்க இயலாமல், கடலில் கலந்து வீணானது.சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து, ஆற்றில் கடல்நீர் ஊடுருவல் அதிகரித்து, ஆற்று நிலத்தடி நீர் மாசடைந்தது. குடிநீர், விவசாயம் பாதிக்கப்பட்டது.இதுகுறித்து, நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. மக்கள், விவசாய அமைப்பினர் போராடினர். இதையடுத்து, பொதுப்பணித்துறையின் கீழ்பாலாறு வடிநில கோட்ட நிர்வாகம், மழைநீரை தேக்கவும், ஆற்றுக்குள் கடல்நீர் புகாமல் தடுக்கவும், ஐ.ஐ.டி., மூலம், குறைவான செலவில் நீர்செறிவூட்டல் தடுப்பணை அமைக்க முடிவெடுத்தது.அதற்காக, 32.5 கோடி ரூபாய் மதிப்பிட்டு, அணுசக்தி துறையிடம், தடுப்பணை அவசியத்தை விளக்கி, இத்திட்டத்திற்கு முழுமையாக நிதி வழங்க கோரியது.அத்துறை ஒப்புதல் அளித்து, தமிழக அரசும் நிர்வாக ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து, வாயலுார் - கடலுார் பாலாற்றுப் படுகையில், கடந்த 2019 இறுதியில், முதல்முறையாக, 1,190 மீ., நீளம், நிலமட்டத்தின் கீழ், மேல் என 16 மீ., உயரம், நீர்த்தேக்கம் 1 டி.எம்.சி., என்ற அளவில் தடுப்பணை அமைக்கப்பட்டது.

வீணாகும் மழைநீர்

அதே காலத்தில், அப்பகுதியிலிருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள வல்லிபுரம் - ஈசூர் ஆற்றுப்படுகையில், மற்றொரு தடுப்பணையும், பொதுப்பணித்துறை நிதியில் அமைக்கப்பட்டது.இவ்விரு தடுப்பணை பகுதிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, மழைநீர் நிரம்பி, குடிநீர், பாசனத்திற்கு பயன்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, வடகிழக்கு பருவகாலத்தில் கனமழை பெய்கிறது. தடுப்பணைகள் போதாமல், மழைநீர் கடலில் கலந்து வீணாகிறது.மழைநீரை மேலும் தேக்குவது கருதி, பொதுப்பணித்துறை, வாயலுார் - வல்லிபுரம் மையத்தில், நல்லாத்துார் பகுதியில், மற்றொரு தடுப்பணை அமைக்க முடிவெடுத்தது.புதிய அணை அமைக்க, திட்ட மதிப்பீடாக, கடந்த 2020ல், 40 கோடி ரூபாய்; பின், 57 கோடி ரூபாய்; 63.50 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. தற்போது, 70 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீட்டை உயர்த்தி, அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பொதுப்பணித்துறை நிர்வாகத்தினர் கூறியதாவது:நல்லாத்துாரில், 780 மீ., நீள தடுப்பணை அமைக்க, 2020ல் முடிவெடுக்கப்பட்டது. தற்போது திட்ட மதிப்பீட்டை 70 கோடி ரூபாய்க்கு உயர்த்தி, அரசிடம் பரிந்துரை அறிக்கை அளித்து, நிதி ஒதுக்கீட்டிற்கு எதிர்பார்த்துள்ளோம். அரசு நிர்வாக ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கியதும் தடுப்பணை அமைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை