உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜி.எஸ்.டி., சாலையை பராமரிக்காத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ... மரண பள்ளங்கள்: அணுகுசாலை, வடிகாலை மாவட்ட நிர்வாகமே சீரமைக்கும் அவலம்

ஜி.எஸ்.டி., சாலையை பராமரிக்காத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ... மரண பள்ளங்கள்: அணுகுசாலை, வடிகாலை மாவட்ட நிர்வாகமே சீரமைக்கும் அவலம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி., தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் மரண பள்ளங்கள், அணுகுசாலை, மழைநீர் வடிகால் இல்லாதது, நடைபாதை ஆக்கிரமிப்பு போன்றவற்றால், அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இச்சாலையை, மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையாக பராமரிக்காததால், கொத்துக்கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஜி.எஸ்.டி., சாலை எனப்படும் மாபெரும் தெற்கு வழித்தட தேசிய நெடுஞ்சாலை, சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் துவங்கி செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், தேனி வரை, 496 கி.மீ.,க்கு உள்ளது. இதில், செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான 29 கி.மீ., சாலையில், நாளொன்றுக்கு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன. புதிதாக வீடு கட்டி குடியேறியவர்கள், தனியார் கல்லுாரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் என, கடந்த 25 ஆண்டுகளில், பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான பகுதிகள், மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளன. இங்கு வசிப்போர் தொழில், வணிகம், கல்வி சார்ந்து சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிக்குள் பயணிக்க, ஜி.எஸ்.டி., சாலை மட்டுமே வழித்தடமாக உள்ளது. தவிர, தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் வாகன ஓட்டிகளும், ஜி.எஸ்.டி., சாலையில் தான் பயணித்தாக வேண்டும். இதுமட்டுமின்றி பல்லாவரம் -- துரைப்பாக்கம் இடையேயான ரேடியல் சாலை, கேளம்பாக்கம் -- வண்டலுார் சாலை ஆகியவையும் ஜி.எஸ்.டி., சாலையில் இணைவதால், வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, ஜி.எஸ்.டி., சாலையில் நுழைதல், வெளியேறுதல் என்ற வகையில் நாளொன்றுக்கு, 3 லட்சம் வாகனங்கள் பயணிப்பதாகவும், விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 5 லட்சம் வரை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. Galleryஇருவழிப் பாதையாக இருந்த ஜி.எஸ்.டி., சாலை, 2004ம் ஆண்டு நான்குவழிப் பாதையாக மாற்றப்பட்டு, தற்போது பெருங்களத்துார் முதல் செட்டிபுண்ணியம் வரை எட்டு வழிச் சாலையாக உள்ளது. அங்கிருந்து பரனுார் வரை ஆறு வழிச் சாலையாகவும், பின் செங்கல்பட்டு வரை நான்கு வழிச் சாலையாகவும் உள்ளது. இதில், அணுகு சாலைக்காக 10 முதல் 20 அடி அகலம் இடம் ஒதுக்கப்பட்டும், பல இடங்களில் அணுகு சாலை மற்றும் நடைபாதை அமைக்கப்படவில்லை. தவிர, சாலையில் மழைநீர் தேங்காதபடி, மழைநீர் கால்வாயும் அமைக்கப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வடிகாலும், தற்போது துார்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., சாலையை உருவாக்கிய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், முறையாக பராமரிப்பது இல்லை. அணுகு சாலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதால், 40 சதவீத இடங்களில் அணுகுசாலை பணிகள் முழுமையடையவில்லை என, பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அணுகுசாலை மற்றும் நடைமேடைக்காக ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடத்தை, சாலையோர கடைக்காரர்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்து, தங்களுக்கான வியாபார இடமாக பயன்படுத்தி வருகின்றனர். கடைகளுக்கு முன்பாக உள்ள அணுகுசாலை, வாகன பார்க்கிங் இடமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், அணுகு சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகளும், நடைமேடையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட விரைவாக செல்ல முடியாத நிலை உருவாகி, விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. ஜி.எஸ்.டி., சாலையின் இரு வழித்தடத்திலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டேங்கர், டிப்பர், டாரஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயணிப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அணுகுசாலையில் பயணிப்பதே பாதுகாப்பானது. ஆனால், பல இடங்களில் அணுகு சாலையே இல்லாததால், பிரதான சாலையில் பயணிக்கும் நிலைக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் விபத்து அச்சத்தில் பயணிக்க வேண்டி உள்ளது. செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், 'சென்டர் மீடியன்' எனப்படும் மையத் தடுப்புகளும் நேர்த்தியாக இல்லை. இச்சாலையில் பல இடங்களில், மின் விளக்குகள் எரிவதில்லை. சாலையின் பல இடங்களில் மரண குழிகள் உள்ளதால், பல உயிர்கள் பலியாகி வருகின்றன. இப்படி, ஜி.எஸ்.டி., சாலை பல வகையிலும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்தும், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக பராமரிக்காமல் அலட்சியம் காட்டி வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இனியாவது ஜி.எஸ்.டி., சாலையில் அணுகு சாலைகளை முறையாக அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய வழிவகுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். அணுகுசாலையால் பிரச்னை தீரும் செங்கை மாவட்ட நிர்வாகம் கூறியதாவது: அணுகு சாலையை முழுமையாக அமைத்துவிட்டால், போக்குவரத்து குளறுபடிக்கு வாய்ப்பில்லை. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், உரிய பதில் இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையின் அணுகு சாலையில் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கி நின்றது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழ் வெளியிட்ட தொடர் செய்தியை சுட்டிக்காட்டி, வடிகாலை துார் வாரும்படி, தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை. பின், கடந்த சில நாட்களுக்கு முன், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த பணி செய்து முடிக்கப்பட்டு, கழிவுநீர் அகற்றப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், மாவட்ட, ஊரக நிர்வாகங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. வழி கிடைப்பதில்லை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் கூறியதாவது: இந்த வழித்தடத்தில் சராசரியாக, ஒரு நாளில் இரண்டு விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் சிக்கிய நபரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடுவதற்காக, அணுகுசாலையில் தான் பல வாகனங்கள் ஒதுங்கிச் செல்லும். தேவைப்படும் நேரத்தில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட அணுகுசாலையில் பயணிக்கும் சூழல் வரும். ஆனால், அணுகுசாலை இல்லாமலும், பல இடத்தில் ஆக்கிரமிப்பிலும் உள்ளதால், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மற்ற வாகனங்கள் வழிவிட முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை