போலி ரூபாய் கட்டுடன் சுற்றிய வடமாநில இளைஞர்கள் கைது
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பின்புறம், அழகேசன் நகர் பகுதியில் எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு நேற்று காலை, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வடமாநில இளைஞர்கள் இருவரை, செங்கல்பட்டு நகர போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, ஆறு ஏ.டி.எம்., கார்டுகள் இருந்துள்ளன. மேலும், வெள்ளை காகிதத்தை ரூபாய் கட்டு போல மாற்றி, முன் பக்கமும் பின் பக்கமும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளனர். இதை பயன்படுத்தி, ஏ.டி.எம்., மையத்திற்கு பணம் எடுக்க வருவோரை திசை திருப்ப முயற்சி செய்தது தெரிந்தது.இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராம் இக்பால் ஷானி,38,சனோஜ் ஷானி,32, என தெரிந்தது. இருவர் மீதும் வழக்குகள் உள்ளதா? தமிழகத்தில் வேறு எங்கேனும் மோசடியில் ஈடுபட்டனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.