திருமண உதவிக்கு லஞ்சம் அரசு அலுவலருக்கு ஓராண்டு
செங்கல்பட்டு:அச்சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவர், தன் மூத்த சகோதரி திருமணத்திற்காக, தமிழக அரசின் மூவலுார் ராமாமிர்தம் அம்மாள் திருமண நிதி உதவி திட்டத்தில், 25,000 ரூபாய், நான்கு கிராம் தாலிக்கு தங்கம் பெறுவதற்காக, 2012, ஜனவரி 5ம் தேதியில், அச்சிறுபாக்கம் வட்டார அலுவலகத்தில் மனு செய்தார். இம்மனுவை பரிந்துரை செய்ய, விரிவாக்க அலுவலர் மல்லிகா, 69, என்பவர், 500 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயமூர்த்தி, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய 500 ரூபாயை அவரிடம் கொடுத்து அனுப்பினர். அப்பணத்தை மல்லிகாவிடம் கொடுத்த போது, மறந்திருந்த போலீசார், மல்லிகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்கை செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றம் செய்தனர்.இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிருபிக்கப்பட்டதால், மல்லிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.