செங்கல்பட்டில் 110 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா பருவத்தில், 67,685 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது. விவசாயிகளிடம் இருந்து, 1.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு, 2,320 ரூபாய், தமிழக அரசின் ஊக்கத்தொகை 130 ரூபாய் என, மொத்தம் 2,450 ரூபாயும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு, 2,302 ரூபாய், தமிழக அரசின் ஊக்கத்தொகை 130 சேர்த்து, மொத்தம் 2,405 ரூபாய் வழங்கப்பட உள்ளது.மாவட்டத்தில், 110 இடங்களில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.மணப்பாக்கம் ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா, கலெக்டர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் அன்பரசன் இதை துவக்கி வைத்தார்.