| ADDED : நவ 27, 2025 04:14 AM
மாமல்லபுரம்: சென்னை தி.நகர் - மாமல்லபுரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கி நிறுத்தப்பட்ட மாநகர் பேருந்துகளை, மீண்டும் இயக்க வேண்டுமென பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாமல்லபுரம், சென்னையை ஒட்டிய முக்கிய சுற்றுலா இடமாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவ சிற்பங்களை காண, சென்னை பகுதியினர் சுற்றுலா வருகின்றனர். மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், பொருட்கள் வாங்க, சென்னை தி.நகர் செல்கின்றனர். தி.நகர் - மாமல்லபுரம் போக்குவரத்து வசதி கருதி, இத்தடத்தில் மாநகர் பேருந்து தடம் எண் 599 முன் இயக்கப்பட்டது. இரண்டு பகுதியில் இருந்தும், 45 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கி, பயணியர் பயனடைந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், இத்தடத்தில் இயங்கிய பேருந்து நிறுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி, அடையாறு - மாமல்ல புரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலை தடத்தில், தடம் எண் 588, பழைய மாமல்லபுரம் சாலை தடத்தில், தடம் எண் 568 ஆகிய மாநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு, பின் நிறுத்தப்பட்டன. தற்போது திருவான்மியூர் - மாமல்லபுரம் இடையே, தடம் எண் 588 மாநகர் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. மாமல்லபுரம் பகுதியினர், திருவான்மியூர் சென்று, வேறு பேருந்திற்கு காத்திருந்து சிரமப்படுகின்றனர். இதனால் கூடுதல் கட்டணம், நேர விரயம் ஏற்படுகிறது. மாமல்லபுரம் - தி.நகர் கட்டணம் 49 ரூபாய் வசூலிக்கப்பட்டது. எனவே, நிறுத்தப்பட்ட மாநகர் பேருந்துகளை மீண்டும் இயக்குமாறு, மாமல்லபுரம் பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.