உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிழக்கு தாம்பரத்தில் 10 வருடங்களாக குடிநீருக்காக தவம் கிடக்கும் மக்கள்

கிழக்கு தாம்பரத்தில் 10 வருடங்களாக குடிநீருக்காக தவம் கிடக்கும் மக்கள்

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி, ஐந்தாவது மண்டலம், 64வது வார்டு, கிழக்கு தாம்பரம், நாகராஜ அய்யர் தெருவில், 25 குடும்பங்கள் வசிக்கின்றன. இத்தெரு ஒரு முட்டுத் தெருவாகும்.இத்தெருவில் இணைப்பு இருந்தும், 10 வருடங்களாக குடிநீர் வினியோகம் இல்லை என, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், தாம்பரம் - வேளச்சேரி சாலை வழியாக செல்லும் பாலாறு குழாயில் இருந்து, இத்தெருவிற்கு இணைப்பு கொடுத்து, வீடு வீடாக குடிநீர் வினியோகித்தனர். அதன்பின், கழிவுநீர் கலந்த தண்ணீர் வந்ததால், அப்போது தாம்பரம் நகராட்சியில் புகார் தெரிவித்தோம்.பொறியியல் பிரிவு அதிகாரிகள், கழிவுநீர் பிரச்னையை சரிசெய்யாமல், வேளச்சேரி சாலையில் பள்ளம் தோண்டி, இத்தெருவிற்கு வரும் குழாயை துண்டித்து விட்டனர்.அதன்பின், 10 ஆண்டுகளுக்கு முன், வேளச்சேரி சாலையில் மற்றொரு புறம் வழியாக செல்லும் குழாயில் இருந்து, இத்தெருவிற்கு புதிதாக குழாய் பதித்து, வீட்டு இணைப்பும் வழங்கினர்.இணைப்பு வழங்கியதோடு சரி, இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இது தொடர்பாக, எத்தனையோ முறை மாநகராட்சியில் புகார் தெரிவித்துவிட்டோம். எங்களது புகாரை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியே, 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.வேறு வழியின்றி, பணம் கொடுத்து குடிநீர் வாங்குகிறோம். மற்ற தேவைகளுக்கு ஆழ்துளை கிணற்று தண்ணீரை பயன்படுத்துகிறோம். இதனால், இங்கு வசிப்போர் வீடுகளை காலி செய்துவிட்டு, வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது, வாடகைதாரர்கள் மட்டுமே உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மனு அளித்தும் பயனில்லை

நாகராஜ அய்யர் தெரு போல், தாம்பரம் - வேளச்சேரி சாலையில், ஆதிநகர் முதல் கேம்ப் ரோடு சந்திப்பு வரை, சாலையை ஒட்டியுள்ள, 40 குடியிருப்புகளுக்கு, கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.இச்சாலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் போது, இந்த வீடுகளுக்கு செல்லும் இணைப்பை துண்டித்து விட்டனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.குறைதீர்ப்பு முகாமில், செங்கல்பட்டு கலெக்டரிடமும் மனு கொடுத்துள்ளனர். மாநகராட்சி கூட்டத்திலும், இப்பிரச்னை குறித்து பேசியுள்ளனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில், இப்பகுதி மக்களிடம் இருந்து குடிநீர் கட்டணம் தொடர்ந்து வசூல் செய்யப்படுகிறது. இது குறித்து, ஐந்தாவது மண்டல உதவி செயற்பொறியாளர் குமாரிடம் கேட்டபோது, ''ஆதிநகர் முதல் கேம்ப் ரோடு வரையுள்ள பிரச்னையை சரிசெய்வது தொடர்பாக, சாலையை தோண்ட நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதி வழங்கவில்லை. நாகராஜ அய்யர் தெருவில், 10 ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை என்ற புகார் தொடர்பாக விசாரிக்கிறேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை