கூடுவாஞ்சேரியில் பட்டாசு கடை வைக்க அனுமதி பெற வேண்டும்
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு கடை வைப்பதற்கு, நகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும் என, நகராட்சி கமிஷனர் ராணி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்வதற்கு, அனுமதி மற்றும் உரிமம் கேட்டு, தற்போது வரை 12 விண்ணப்பங்கள் வந்துள்ளன.இதுகுறித்து ஆய்வு செய்த பின் அனுமதி வழங்கப்படும். மேலும், பட்டாசு கடை வைப்பதற்கு உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் நகராட்சி சுகாதார அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோரிடம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.நகராட்சி அதிகாரிகள் பட்டாசு கடை வைக்க உள்ள இடத்தை ஆய்வு செய்து, அங்கு உரிய பாதுகாப்பு வசதிகள் உள்ளதா, எளிதில் தீப்பற்றி எரிந்தால், அதை அணைப்பதற்கு தேவையான கருவி, முதலுதவி பெட்டி போன்ற பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும்.இந்த ஆவணங்களுடன் மறைமலை நகரில் உள்ள தீயணைப்பு துறை மீட்பு படையினர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியோரிடமும் உரிய அனுமதி பெற வேண்டும்.அவ்வாறு அனுமதி பெறாமல் பட்டாசு கடை வைத்திருப்பவர்களுக்கு, பட்டாசுகள் பறிமுதல் செய்வதோடு, அபராத தொகையுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.