புத்திரன்கோட்டை வார சந்தை 4 ஆண்டுக்கு பின் மீண்டும் துவக்கம்
சித்தாமூர்: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட புத்திரன்கோட்டை வாரச்சந்தை, நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், நான்கு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் செயல்படத் துவங்கி உள்ளது. புத்திரன்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நுகும்பல், போந்துார், கல்பட்டு, ஈசூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் தேவையை கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக, புத்திரன்கோட்டை பகுதியில், வெள்ளிக்கிழமையில் வாரச்சந்தை நடந்து வந்தது. சுற்று வட்டாரங்களில் வசிக்கும் விவசாயிகள், தங்களது நிலத்தில் விளைந்த காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகளை இந்த சந்தையில் விற்பனை செய்து வந்தனர். வியாபாரிகள் பலர் சென்னை கோயம்பேடு மற்றும் திண்டிவனம் சந்தைகளில் இருந்து காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்கி வந்து, புத்திரன்கோட்டை சந்தையில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா காலத்தில் சந்தை நிறுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. இதனால் விளைவிக்கும் காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகளை விற்பனை செய்ய முடியாமல், விவசாயிகள் தவித்து வந்தனர். இதுகுறித்து நம் நாளி தழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, புத்திரன்கோட்டை வாரச்சந்தை மீண்டும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படத் துவங்கி சில வாரங்களாக நடந்து வருகிறது.