திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 63 ஏரிகள் உள்ளன. இதில், பெரிய ஏரிகளுள் ஒன்றாக கொண்டங்கி ஏரி உள்ளது. இது, 650 ஏக்கர் பரப்பும், 287.94 மில்லியன் கன அடி கொள்ளளவும், 16.11 அடி ஆழமும் கொண்டது.நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஏரி நீரை நம்பி, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, கீழூர், மேலையூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,000 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.மேலும், திருப்போரூர் பேரூராட்சி பகுதிக்கும், கொண்டங்கி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் செல்கிறது.இதில், நெல்லிக்குப்பம் கிராமத்திற்கு செல்லும் ஒரு பாசன கால்வாய் மூலம், 350 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த பாசன கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு, அதன் அளவு குறுகி, புதர் சூழ்ந்து காணப்பட்டது.கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைப்பது தொடர்பாக, விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, நீர்வளத்துறை மற்றும் ஜமாபந்தியில் புகார் மனு அளித்தனர்.இந்நிலையில், மனு மீதான நடவடிக்கையாக, திருப்போரூர் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு செய்யும் பணிகள், கடந்த ஜூன் மாதம் தீவிரமாக நடந்தன.அளவீடு செய்யும் பணிகள் முடிந்து, ஆக்கிரமிப்பு செய்த நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், 'ஆக்கிரமிப்பு செய்யவில்லை' எனக்கூறி, சம்பந்தப்பட்ட நபர்கள் திருப்போரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கு நிலுவையில் இருந்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை, அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். இந்நிலையில், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க வேண்டும் என, மீண்டும் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தனர்.இதையடுத்து, முதற்கட்டமாக பொக்லைன் இயந்திரம் மூலம், கால்வாய் 3.25 கி.மீ., தொலைவு வரை சீரமைப்பு பணிகள் நடந்தன.நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடத்தை தவிர்த்து, மற்ற மூன்று இடங்களில் கால்வாயின் குறுக்கே வழித்தடத்திற்காக அமைக்கப்பட்ட உருளை குழாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.