பழுதான மின் வாரிய அலுவலக கட்டடம் திருப்போரூரில் சீரமைப்பு பணி தீவிரம்
திருப்போரூர்:திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் மின் வழங்கல் நிலையம், செயற்பொறியாளர் அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மின் கட்டண செலுத்தல் மையம், மின் வாரிய ஊழியர்கள் குடியிருப்பு ஆகியவை உள்ளன. கடந்த 1971ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால், இந்த கட்டடம் சேதமடைந்து பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு காணப்பட்டது.மேலும், இளநிலை பொறியாளர் அலுவலகம், கட்டண வசூல் மையம் ஆகியவை அமைந்துள்ள கட்டடத்தின் கூரையில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த கட்டடத்தை பழுதுபார்க்க வேண்டுமென கோரிக்கை எழுந்துவந்தது.இதையடுத்து, கட்டட மேல்தளம், உள்புற கூரை, பக்கவாட்டு சுவர் விரிசல், தரைப்பகுதி என அனைத்தும் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 70 சதவீதம் பணி முடிந்துள்ளது.