அரசு பள்ளிக்கு கூடுதலாக கட்டடம் கட்ட கோரிக்கை
திருப்போரூர்:நெல்லிக்குப்பம் அரசு துவக்க பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இதில், இரண்டு வகுப்பறை கட்டடங்கள் பழுதடைந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டு, காலி இடமாக உள்ளது. தற்போது இப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போதுமான அலுவலகம், வகுப்பறைகள் கட்டடம் இல்லை. இதனால், ஒரே கட்டடத்தில் இரண்டு வகுப்பு மாணவர்களை அமர வைத்து, பாடம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. கூடுதல் வகுப்பறை கட்டடம் கேட்டு, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவை எம்.பி., மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில், மேற்கண்ட அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.